Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

By Christon
09 Dec 2025, 01:43 PM
உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஜார்ஜ்டவுனில் உள்ள சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற முந்தைய உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் துறைகளுக்கிடையே ஒத்துழைப்பு இல்லாதது பொதுமக்களைப் பாதிக்கும் என்று நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் துறை ஒத்துழைப்பு இன்மையும்

சென்னை ஜார்ஜ்டவுனில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் சி. குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை பெருநகர மாநாகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆக்கிரமிப்பை அகற்றுவதற்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி காவல்துறைக்கு ஐந்து முறை கடிதம் எழுதியதாகவும், காவல்துறை பாதுகாப்பு அளிக்காததால் ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை என்றும் கூறினார். இதற்குப் பதிலளித்த காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், மாநாகராட்சி எழுதிய கடிதம் தெளிவாக இல்லை என்று தெரிவித்தார்.

நீதிபதிகளின் கண்டிப்பு மற்றும் உத்தரவு

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அரசின் இரு துறைகளுக்கிடையே ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தால், அது பொதுமக்களைப் பாதிக்கும் என்று கூறினர். அனைத்துத் துறைகளும் ஒன்றிணைந்து செயல்படுவது என்பது நிர்வாகத்தின் அடிப்படை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கில் உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி-யை தாமாக முன்வந்து இணைத்த நீதிபதிகள், நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.