தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர் நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த நடராஜன்-ருக்குமணி தம்பதியினருக்கு குமார், செந்தில், முருகன், என்ற மகன்கள் உள்ளனர். கடந்த 1985-ம் ஆண்டு சொந்த ஊரிலிருந்து அனைவரும் சென்னைக்கு குடி பெயர்ந்து அங்கு வேலை செய்து வந்தனர். மூத்தவரான குமாரை வேலைக்கு செல்ல பெற்றோர் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் பெற்றோரிடம் கோவித்துக் கொண்டு குமார் வீட்டை விட்டு வெளியேறி சென்றார்.
காணாமல் போன மகனை பெற்றோர் பல இடங்களிலும் தேடினர். ஆனால் குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. மகன் காணாமல் போன மன வருத்தத்தில் இருந்த நடராஜன் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நடராஜன் மனைவி ருக்குமணி தனது இரண்டாவது மகன் செந்திலுடன் சொந்த ஊரான கதிர் நரசிங்கபுரத்தில் வந்து குடியேறினார். இளைய மகன் முருகன் சென்னையிலேயே வேலை செய்து வந்தார். இதனிடையே 12 வயதில் காணாமல் போன குமார், மீண்டும் ஊருக்கு திரும்பி செல்ல கூடாது என்ற வைராக்கியத்துடன் பல ஊர்களில் கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வந்தார்.
பல்வேறு மாநிலங்களில் வேலை பார்த்த குமார்:
மும்பை,ஆந்திரா மற்றும் காஷ்மீரில் கூலி வேலை செய்த குமார், மலேசியாவிலும் சென்று வேலை செய்து வந்துள்ளார். கடைசியாக அவர் தமிழகம் வந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மச்சுவாடி என்ற பகுதியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு பல ஆண்டுகளாக வேலை செய்து வந்த குமாரை, ஆறுமுகத்துக்கு மிகவும் பிடித்துப் போனதால் தனது பேத்தியை திருமணம் செய்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து குமார் மச்சுவாடியிலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளார். மனைவியுடன் வசித்து வந்த குமாருக்கு 3 மகள்களும் பிறந்து உள்ளனர்.
ஆண்டுகள் பல கடந்த பின்னர் மூத்த மகளுக்கு திருமணமும் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் உள்ள மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் செல்ல முடிவெடுத்துள்ளார். அதன்படி வேலப்பர் கோவிலுக்கு பஸ்சில் சென்ற போது கதிர்நரசிங்கபுரம் ஊரை பார்த்ததும் குமார் தனது குடும்பத்துடன் அங்கு இறங்கி தனது குடும்ப விவரங்களை ஊராரிடம் விசாரித்துள்ளார். உடனடியாக ஊர் பொதுமக்கள் அவருடைய குடும்பம் குறித்தும், தாய் ருக்குமணி வசிக்கும் வீடு குறித்தும் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குமார் தனது தாய் இருக்கும் வீட்டிற்கு சென்றார். 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது தாயை சந்தித்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மகனை கண்டதாய் ருக்குமணி ஆனந்த கண்ணீர் விட்டபடி மகனை கட்டி தழுவினார். மேலும் சுமார் 90 வயதாகும் குமாரின் பாட்டி தனது பேரனை கண்டு மகிழ்ச்சியில் கண்கலங்கினார். மேலும் உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்த குமார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 40 ஆண்டுகளுக்குப் பின்னர் காணாமல் போன மகன் தனது குடும்பத்துடன் இணைந்த சம்பவம் கதிர் நரசிங்கபுரம் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.