Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

Savukku Shankar : 5 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளிவந்த சவுக்கு சங்கர்!

By Kumudam News
26 Sep 2024, 01:11 AM
Savukku Shankar Released From Jail : உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமீனில் வெளியில் வந்தார்

Savukku Shankar Released From Jail : தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதாவது கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருச்சி, சென்னை உள்பட பல இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பாய்ந்தன. 

சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மற்ற மாவட்ட நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. இதற்கிடையே சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதனை எதிர்த்து அவரது தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அனைத்து வழக்குகளிலும் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், அவர் மீது மீண்டும் ஒரு குண்டர் சட்டம் பாய்ந்தது. 

அதாவது வாகனத்தில் அவர் 2 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். சவுக்கு சங்கரை(Savukku Shankar) குண்டர் சட்டத்தில் அடைத்தது தொடர்பாக அவரது தாயார் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு  உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யும்படி அவரது தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், வழக்கு விசாரணையின்போது சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம் திரும்ப பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ததுடன், அவரது தாய் தொடர்ந்த வழக்கையும் முடித்து வைத்தது. மேலும் வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால் சவுக்கு சங்கரை ஜாமீனில் விடுவிக்கவும் காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமீனில் வெளியில் வந்தார். அப்போது அங்கு வந்த பாஜகவினர் சிலர் சால்வை அணிவித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.