தமிழ்நாடு

ஃபெஞ்சல் புயல் எதிரொலி..  அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க முதல்வர் உத்தரவு 

By VASUKI
01 Dec 2024, 03:31 AM
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல்  புயலாக உருவானது.இதையடுத்து இந்த புயல் இன்று இரவு அல்லது நாளை ( ஞாயிற்றுக்கிழமை) காலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால்   பெரும்பாலான சாலைகள், தெருக்களில் வெள்ளம் தேங்கி உள்ளது.  

  பலத்த காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து பகுதிகளிலும் ஆட்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் பரபரப்பாக காணப்படும் சென்னையின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 

தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால்   பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.  இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு வழங்க வேண்டிய உணவை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.

ஃபெஞ்சல் புயல் எதிரொலியால்  சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலெக்டரிடம் கேட்டறிந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறைகளுக்கு பொதுமக்களிடமிருந்து தொலைபேசி வாயிலாக பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களிடம் நிலவரங்களை  கேட்டறிந்த முதலமைச்சர், மழை முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டார். 

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக் காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்றும்  அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளுடன் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டுள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்கள் பசியாற சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று முழுவதும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.