தமிழ்நாடு

சென்னையில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழப்பு

By Jayakumar
24 Sep 2025, 06:55 PM
சென்னை வடபழனியில் மர்ம காய்ச்சல் காரணமாக 6 வயது சிறுமி உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை
சென்னை வடபழனி மன்னார் முதல் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன். சொந்த ஊர் ஈரோடு. இவரது 6 வயது மகள் சஞ்சனா ஸ்ரீ. மகேந்திரனுக்கு கடந்த சில வருடமாக கல்லீரல் பிரச்சனை இருந்து வருகிறது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக வடபழனியில் வாடகை வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கி அரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

6 வயது சிறுமி மர்ம மரணம்

நேற்று முன்தினம் சஞ்சனாஸ்ரீக்கு பிறந்தநாள் என்பதால் ஈரோட்டில் இருந்த குழந்தையை அழைத்து வந்தார். குழந்தைக்கு காய்ச்சல் இருந்து வந்ததால் நேற்று இரவு மருந்து கொடுத்து தூங்க வைத்தார். குழந்தையை காலையில் எழுப்பியபோது எந்தவித அசைவும் இல்லாமல் வாய் மூக்கில் ரத்தம் கசிந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

வடபழனி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வடபழனி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

சஞ்சனாஸ்ரீ உடலை பிரேத பரிசோதனைக்காக கே.கே. நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ஆஸ்பிரேஷன் நிமோனியா என்ற நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக சிறுமி சஞ்சனா ஸ்ரீ இறந்ததாக கூறப்படுகிறது. சென்னைக்கு வந்த சிறுமி சஞ்சனாஸ்ரீயை பெற்றோர் காய்ச்சலோடு மெரினா கடற்கரைக்கு அழைத்து சென்று மீன் போன்ற உணவுகளை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் உடலில் சில அறிகுறிகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான முழு காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.