Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஆட்டோவில் வந்த பயணியிடம் செல்போன் அபேஸ்.. ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் கைது!

By VASUKI
07 Jun 2025, 04:28 PM
மீன்பிடிதுறைமுகம் பகுதியில் பயணியிடம் செல்போன் பறித்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், செல்போன் மீட்கப்பட்டு, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, திருவொற்றியூர் பகுதியில், கணக்கர் லைன், 5வது தெருவில் வசித்து வரும் ஜெகன் என்பவர் சென்னை துறைமுகத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஜூன் 4 அன்று இரவு இராயபுரம் செல்வதற்காக ஒண்டிக்குப்பம் பகுதியிலிருந்து ஆட்டோவில் ஏறி பயணம் செய்த போது, ஆட்டோ ஓட்டுநர் வழியில் காசிமேடு, சுடுகாடு உட்புறம் ஆட்டோவை நிறுத்தி அவரது நண்பருடன் சேர்ந்து ஆட்டோவில் பயணம் செய்த ஜெகனை மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு, ஜெகனை ஆட்டோவிலிருந்து இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஜெகன் N-4 மீன்பிடிதுறைமுகம் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். N-4 மீன்பிடிதுறைமுகம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, மேற்கண்ட வழக்கில் தொடர்புடைய நவீன், கௌதம், ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் செல்போன் மீட்கப்பட்ட நிலையில், 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் விசாரணையில், நவீன் மீது ஏற்கனவே 2 வழக்குகளும், கௌதம் மீது 1 வழக்கும் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் இன்று (ஜூன் 6) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.