மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நீல்பாத் பகுதியில் கிரிக்கெட் வீரர் ஷஷாங்க் சிங்கின் பங்களா உள்ளது. இங்கு ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த விபேந்திர சிங் தோமர் (31) என்பவர் கடந்த ஜூன் 25-ஆம் தேதி சமையல் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அவருக்கு மாதம் ரூ.15,000 சம்பளமும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே, அவர் சமைத்த உணவின் தரம் குறித்து ஷஷாங்க் சிங்கின் குடும்பத்தினர் தொடர்ந்து தகராறு செய்து, அவரை மோசமாக நடத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விபேந்திர சிங், வேலையை விட்டுத் தனது சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவதாகக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஷஷாங்க் சிங் மற்றும் அவரது தந்தை ஷைலேஷ் சிங் (ஓய்வுபெற்ற காவல்துறை சிறப்பு இயக்குநர் ஜெனரல் - IPS), தங்களது கார் டிரைவர் மிஸ்ராவுடன் சேர்ந்து அவரது செல்போனைப் பறித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பயந்துபோன சமையல்காரர் பாதுகாப்புக்காகத் தன்னை ஒரு அறைக்குள் பூட்டிக்கொண்டார். எனினும், இவர்கள் மூவரும் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே புகுந்து, அவரை கொடூரமாகத் தாக்கி, வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சமையல்காரர் போபாலில் உள்ள ரதிபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவரது முகம் மற்றும் உடலில் பலத்த காயங்கள் இருப்பது உறுதியானது. இதையடுத்து, ஆபாசமாகத் திட்டுதல் மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கிரிக்கெட் வீரர் ஷஷாங்க் சிங் உட்பட மூவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.