சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு.இவர் ஐ.பி.டி.எஸ் என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இவரும் திருச்சியைச் சேர்ந்த நரேஷ் மற்றும் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன் ஆகியோரும் தவெக எல்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தியாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எல்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசு உள்ளிட்டு எட்டு பேரை கைது செய்துள்ளனர்.
தொடர் விசாரணை மூலம் தவெக ஆட்சி கவிழ்க்க பின்னணியில் கோவை தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏவும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இருப்பது தெரிய வந்தது. இந்த சதி திட்டத்தில் 180 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதாரர் அசோக்குமார் ஆகிய இருவரையும் வருகின்ற ஜுலை 6ஆம் தேதி திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜாராக சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மனை இன்று செந்தில் பாலாஜி வீட்டில் அவரது தந்தை வேலுச்சாமியிடம் ஒப்படைத்துள்ளனர்.