முதல்வர் விஜய் தலைமையில் தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கோவளத்தில் இன்று (ஜூலை 1) நடைபெற்றது. தவெக அரசுக்கு ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதுடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றன.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) உள்ளிட்ட தோழமை கட்சித் தலைவர்களை தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி நடைபெற்ற கூட்டத்தில், தவெக அரசு அமைவதற்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு முதலில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அதேபோல், தோழமை கட்சிகளும் தவெக அரசுக்கு தங்கள் வாழ்த்துகளையும், ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தின. தொடர்ந்து, கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது, ஒருங்கிணைந்த அரசியல் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்த பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய மாணிக்கம் தாகூர், "தவெக தோழமை கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இது ஒரு நல்ல தொடக்கம். மிகவும் நேர்மறையான சூழலில் கூட்டம் நடைபெற்றது" என்றார்.
மேலும், "இந்தக் கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மிக விரைவில் அடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் கூட்டணிக்கான பெயர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
அத்துடன், "எதிர்காலத்தில் தவெகவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தால், அவர்கள் இந்தியா (INDIA) கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும். தற்போது தவெக தலைமையிலான தோழமை கூட்டணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கியுள்ளன" என்றும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டார்.
கோவளம் கூட்டத்தில் கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டுவது குறித்து அறிவிப்பு வெளியாகியிருப்பது, தமிழக அரசியலில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.