Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

களம் எங்களது.. கூட்டணி எங்களது... திருமாவளவன் போக மாட்டார்... அமைச்சர் ரகுபதி உறுதி!

By nishika
09 Nov 2024, 08:20 AM
திருமாவளவன் நிச்சயம் திமுக கூட்டணியை விட்டு செல்லமாட்டார். களம் எங்களது கூட்டணி எங்களது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணை முதல்வர் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “எடப்பாடி பழனிச்சாமி எப்போதும் பகல் கனவு கண்டு கொண்டிருப்பவர். அவருடன் கூட்டணி போவதற்கு யாரும் தயாராக இல்லை. தேமுதிக மட்டும்தான் அவர்களுடன் உள்ளது. அவர்களும் கழண்டுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தனி மரம் தோப்பாகாது எடப்பாடி பழனிச்சாமி கனவு பலிக்காது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் செயல்படுத்தக்கூடிய திட்டங்களும் மக்களுக்கான திட்டங்கள்தான். உதாரணத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் போன்றவைகள். மக்களுக்கான திட்டங்களை இந்த அரசு செய்ததைப்போல இதுவரை எந்த அரசும் இந்தியாவிலே செய்ததில்லை இதை எங்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். 

எடப்பாடி பழனிச்சாமி ஏதாவது திட்டங்களை அவரால் சொல்ல முடியுமா? எந்த வகையிலும் 2026 களம் மாறாது. களம் எங்களது கூட்டணி எங்களது. இந்தியா கூட்டணி வெல்லும். கூட்டணி ஆட்சி அமையும் என்று அன்புமணி ராமதாஸ் பகல் கனவு கண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நிச்சயம் எங்களது கூட்டணி வென்று எங்களது ஆட்சிதான் அமையும். மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்று புதிய வரலாற்றை படைப்பார். கூட்டணியை பிரிப்பதற்கு யார் எந்த சதி வேலைகளை செய்தாலும் எங்களுடன் இருப்பவர்கள் நட்போடும் பாசத்தோடும் இருப்பவர்கள். எந்த சதி வேலைகளிலும் அவர்கள் சிக்க மாட்டார்கள். நிச்சயமாக திருமாவளவனும் கூட்டணியில் நீடிப்பார்.

விஜய் கட்சியை பார்த்து நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமும் கிடையாது பயமும் கிடையாது. மடியில் கணமும் இல்லை வழியில் பயமும் இல்லை. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. திமுக எதைக் கண்டும் பயப்படவில்லை. தேர்தல் களத்தில் நாங்கள் இறங்கிவிட்டோம். மற்றவர்கள் இன்னும் இறங்கவில்லை. பணிகளை தொடங்கி விட்டோம். நிச்சயமாக மக்களிடம் எங்களுடைய திட்டங்களை கொண்டு சென்று சேர்த்து அதன் மூலமாக வாக்குகளை பெறுவோம். அதை யாராலும் தடுக்க முடியாது. நாங்கள் வேண்டுமென்று யார் மீதும் வழக்கு போடுவது கிடையாது. அந்தப் பழக்கமும் பழிவாங்குகின்ற பழக்கமும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கிடையாது. 

விஜய் அதிமுகவை பற்றி விமர்சிக்காததற்கு பல கருத்துக்களை கூறலாம். அதிமுகவிடம் ஒன்றுமே இல்லாததால் விஜய் அவர்களை விமர்சிக்காமல் இருந்திருக்கலாம். சிறையில் நடந்த பிரச்சனைக்கு நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துறை ரீதியான விசாரணையும் நடைபெறும். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக உள்துறை செயலாளருக்கு விளக்கமும் அனுப்பப்படும்
 எனத் தெரிவித்துள்ளார்.