அரசியல்

மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் மயங்கி விட மாட்டார்கள்- திருமாவளவன்

By Jayakumar
07 Jun 2025, 12:40 PM
பாஜகவின் மதவாத அரசியலுக்கு பிற மாநில மக்கள் மயங்கி விடுவதுபோல், தமிழக மக்களும், முருக கடவுளும் மயங்கி விடமாட்டார்கள் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து
சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “மாநிலத்துக்கு மாநிலம் மாறி, மாறி பாஜக மாதவாத அரசியலை கையில் எடுக்கும்.

அரசியல் யுக்தி

வட இந்தியாவிற்கு சென்றால் ராமர், விநாயகரை கையில் எடுக்கும். மேற்கு வங்கத்திற்கு போனால் துர்கா, காளி என்றும் தமிழகத்திற்கு வந்தால் முருகன் என்று வெவ்வேறு வடிவங்களில் அரசியல் யுத்தியை பாஜக கடைபிடித்து வருகிறது.

பிற மாநிலங்களில் இவர்களது அரசியல் மதவாத்திற்கு மக்கள் மயங்குவது போல், தமிழக மக்களும், முருக கடவுளும் மயங்கி விட மாட்டார்கள்.தமிழ் கடவுள் முருகன் மதவாத சக்திக்கு இடமில்லை என்று விரட்டியடிக்க கூடியவர். சங்கிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முருகர் உறுதிப்படுத்துவார்.ஆகவே அவர்கள் என்ன மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் எடுபடாது.


கணக்கெடுப்பு வரவேற்கத்தக்கது

பாஜக ஆட்சியில் இருக்கும் போதே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.குறிப்பாக வரும் 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த இருப்பது வரவேற்கத்தக்கது.

கடந்த 2021-ல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிப்போனதால், அடுத்து வரும் 2031 தான் நடத்துவார்கள் என்ற நிலையில் வரும் 2029 நாடாளுமன்றத்தேர்தலை கணக்கில் கொண்டு இவர்களது ஆட்சி காலத்திலேயே 2027-ல் நடத்துகிறார்கள்.

மத்திய அரசு முடிவு எடுக்கக்கூடாது

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதையும் வரவேற்கிறோம்.இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து குழு அமைக்கப்படும்.இதில், தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது.இதில், குறிப்பாக தமிழகம் பாதிக்கப்படக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். முதலமைச்சரின் இந்த கருத்திற்கு விசிக உறுதுணையாக இருக்கும்.

தொகுதி மறுவரையறையின்போது, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, எப்படி தொகுதி மறுசீரமைப்பு செய்வது என்பது குறித்து ஆலோசித்து மறுவரையறை மேற்கொள்ள வேண்டும். இதில், அவசரப்பட்டு மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்பது விசிகவின் கருத்து” என தெரிவித்தார்.