அரசியல்

தவெக-வுக்கு ஆதரவு தரலாமா? கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் சொன்ன சீக்ரெட்!

By Christon
07 May 2026, 04:31 PM
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அட்வைஸ் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அட்வைஸ் செய்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சியை இழந்தாலும், திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் (5), விசிக (2), சிபிஐ (2), சிபிஎம் (2) என கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் காங்கிரஸ் ஏற்கனவே தவெக-விற்கு ஆதரவு அளித்துவிட்டது. ஆட்சி அமைக்க இன்னும் 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தவெக-விற்குத் தேவைப்படும் நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் அக்கட்சி ஆதரவு கோரியுள்ளது.

சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் ரகசிய ஆலோசனை

இன்று சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க. ஸ்டாலினின் இல்லத்தில் விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சித் தலைவர்கள் அவரைச் சந்தித்தனர். இந்த ஆலோசனையின் போது, ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதித் தோல்வி குறித்தும், ஒட்டுமொத்த தேர்தல் பின்னடைவு குறித்தும் விவாதித்தார். அப்போது தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஸ்டாலின் சொன்ன அந்த 'அட்வைஸ்'

ஆலோசனையின் போது ஸ்டாலின் பேசுகையில், "தவெக-விற்கு ஆதரவு அளிக்கத் தவறினால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி பாஜக மறைமுகமாகத் தனது அதிகாரத்தைச் செலுத்த முயலும். அதற்கு நாம் ஒருபோதும் வழிவகை செய்துவிடக் கூடாது. எனவே, மதச்சார்பற்ற சக்திகள் சிதறாமல் இருக்க தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளியுங்கள்" எனத் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள உயர்மட்டக் குழு கூட்டங்களில் விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய மூன்று கட்சிகளும் தவெக-விற்குத் தங்களது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.