அரசியல்

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

By Sumalekha
31 Jul 2026, 02:22 PM
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-2025 காலகட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைக் துறை அமைச்சராகப் பணியாற்றிய செந்தில் பாலாஜி, டாஸ்மாக் மதுபானக் கொள்முதல், பார்களுக்கான உரிமம் மற்றும் பணியாளர் நியமனங்களில் முறைகேடு செய்ததாக ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன் உள்ளிட்ட 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வில் செந்தில் பாலாஜி தரப்பில் அவசர மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தொடர்புடைய சாட்சிகளையோ ஆதாரங்களையோ கலைக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றும், தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மேலும், விசாரணைக் காலத்தில் செந்தில் பாலாஜியால் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் அரசுத் தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிபந்தனைகளுடன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.