"தப்பே செய்யாத எங்களை அப்போதைய அமைச்சர் ராஜேந்திரன் கட்சியை விட்டு நீக்கிட்டார். விளக்கம் கூட கேட்கல. மூணு வருஷமாகியும் திரும்ப கட்சியில சேர்க்கல. உழைச்ச எங்களுக்கு தி.மு.க. தலைமை கொடுக்கும் மரியாதை இதுதானா?" என்று பொங்குகிறார்கள் சேலம் தி.மு.க. நிர்வாகிகள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலர், "சேலம் மாநகரச் செயலாளராக இருந்தவர் ஜெயக்குமார், மெய்யனூர் பகுதிச் செயலாளராக இருந்தவர் சர்க்கரை சரவணன். இவர்களை மூன்று வருடங்களுக்கு முன்பு அப்போதைய அமைச்சர் ராஜேந்திரன் நீக்கிவிட்டார்
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கன்னக்குறிச்சி குபேந்திரனை நீக்கினார். 47வது வார்டு சிட்டிங் கவுன்சிலரின் கணவர் ராமலிங்கம், 9வது டிவிஷன் செயலாளர் மோகன், 7வது வார்டு நிர்வாகி சுந்தர் ராஜன், மாநகர முன்னாள் து.செயலாளர் லலிதா என கட்சிக்கு கடுமையாக உழைத்தவர்களையும் ராஜேந்திரன் அடுத்தடுத்து நீக்கிவிட்டார். இதன் காரணமாக ஏராளமானோர் கட்சியில் இருந்து விலகி நிற்கிறார்கள்.
சேலம் மாநகரச் செயலாளராவும், தலைமை செயற்குழு உறுப்பினராவும் இருந்த ஜெயக்குமாரை நீக்கிவிட்டு இதுவரை விளக்கம் கேட்கவில்லை. ஜெயக்குமார், தான் தப்பு செய்யவில்லை என தலைமையிடம் ஏழு தடவை விளக்கக் கடிதம் கொடுத்தும் இதுவரைக்கும் அவரை கூப்பிட்டு விசாரிக்கவில்லை. பொதுவாக, சஸ்பெண்ட் பீரியட் மூணு மாசம் முதல் ஆறு மாசம் தான். தி.மு.க. மாதிரியான ஜனநாயகக் கட்சியில இதெல்லாம் முறையாக நடக்கும். ஆனால், மூன்று வருஷங்களாகியும் கூப்பிட்டு கேட்கல. இதெல்லாம், கட்சிக்காக உழைச்சவங்களுக்கு எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்தும்.
தலைவர் ஸ்டாலின் கூட இதை கண்டுக்கல. 'ஸ்டாலினால தான் கட்சி கெடுதுனு 45வது வார்டு செயலாளரான ஆட்டோ ராஜா பேட்டி கொடுத்ததையடுத்து அவரை கட்சியை விட்டு நீக்கினார் ராஜேந்திரன். அந்த ராஜாவை சட்டமன்றத் தேர்தலின்போது தன்னோட சுயலாபத்துக்காக ராஜேந்திரன் சேர்த்துக்கிட்டார். வீரபாண்டியார் காலத்தில், அதுவும் தி.மு.க ஆட்சியில இல்லாதப்போ ஸ்டாலினை எதிர்த்து, வீரபாண்டியாருக்கு ஆதரவா நின்னவங்கள்லாம்.
இன்னைக்கு ராஜேந்திரன்கூட நெருக்கமாக இருக்கிறார்கள். அவர்களை, ஏத்துக்கிட்ட ராஜேந்திரன், மூன்று வருஷங்களாக இவர்களை சேர்க்காமல் இருக்கிறார். திமு.க. மேல் இருக்கிற பற்றினால்தான் இவர்கள் எல்லாம் பொறுமையாக இருக்கிறார்கள். தலைமை இவர்களை உடனே கட்சியில சேர்க்கணும்" என்றார்கள்.
மாஜி அமைச்சர் ராஜேந்திரன் நம் அழைப்பை எடுக்காத நிலையில், கட் சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாநகரச் செயலாளர் ஜெயக்குமாரோ, "சொல்லி என்ன ஆகப்போகுது" என்று சலிப்போடு இணைப்பை துண்டித்தார்.
நிறைவாக ராஜேந்திரன் ஆதரவாளர்களிடம் பேசியபோது, "ஜெயக்குமார், சர்க்கரை சரவணன் உள்ளிட்ட சிலரின் மீதான புகாரின் அடிப்படையில்தான் கட்டம் கட்டினார் ராஜேந்திரன். இதில் உள்நோக்கம் எதுவுமில்லை. தலைமை சேர்க்க சொன்னால் சேர்த்துக்க போறார்" என்றார்கள்.
தொண்டர்கள்தான் கட்சியின் உயிர்நாடி... தி.மு.க தலைமைக்கு இது புரிந்தால் சரி!