சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, 'விருத்தாசலம் தொகுதியில் வீடு எடுத்து தங்கி மக்கள் பணியாற்றுவேன்' என வாக்குறுதியளித்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதை மறந்துவிட்டதுடன், தொகுதியில் மக்கள் பணிகளைப் பார்க்காத அதிகாரிகளை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குவதால் பொறிபறக்கிறது விருத்தாசலம்!
இதுகுறித்து கடந்த தேர்தலில் பிரேமலதாவிடம் தோல்வியடைந்த த.வெ.க. வேட்பாளர் இ.எம்.ஆர்.எஸ். விஜய் பேசினார். "தொகுதியில் வீடு எடுத்து தங்கி மக்கள் பிரச்னையை தீர்ப்பேன் என்று பிரேமலதா விஜயகாந்த வாக்குறுதி அளித்திருந்தார். அவர் அளித்த முதல் வாக்குறுதியையே அவரால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், வாரத்தில் மூன்று நாட்கள் ஆய்வுக் கூட்டம் என தொகுதிக்கு வந்து அரசு அதிகாரிகளை லெஃப்ட் அண்ட் ரைட் வெளுத்து வாங்குகிறார்.
விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூர் என மூன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளை நேரில் அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது அவர், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பணிதளப் பொறுப்பாளர் என்று ஒருவரை போட்டிருப்பார்கள். அதுபோல தற்போது பணிதளப் பொறுப்பாளரை எம்.எல்.ஏ. கொடுக்கும் லிஸ்ட்படிதான் நியமிக்க வேண்டும்' என்றிருக்கிறார். இதுபோல் நகராட்சி அலுவலக ஊழியர்கள், மின்சாரம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல துறைகளின் அதிகாரிகளை அழைத்து சொந்தச் கட்சி நிர்வாகிகளுக்கு என்னென்ன செய்து தரமுடியுமோ செய்து தாருங்கள் என உத்தரவிடுகிறார்.
இதைவிட கொடுமையாக, தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் சங்கத் தலைவராக தன் கட்சிக்காரர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்று நிர்பந்தித்து வருகிறார். இப்படி அரசு நிர்வாகத்தில் கட்சிக்காரர்கள் செல்வாக்கு செலுத்த அனுமதிக்க வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் பரிந்துரைப்பதே ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகிவிடும். எங்கள்
தலைவர் விஜய் ஆட்சியில் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள்" என்றார்.
பெயர் சொல்ல விரும்பாத ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சிலரோ, "தமிழ்நாட்டிற்கு முதல்வராக விஜய் இருக்கலாம். ஆனால், விருத்தாசலம் தொகுதிக்கு நான்தான் முதல்வர். என் கட்டளையை ஏற்க மறுத்தால் உங்களைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவேன் என்று அதிகாரிகளை மிரட்டிவருகிறார் பிரேமலதா" என்றார்கள்.
இதற்கு விளக்கம் பெற தேமுதிக விருத்தாசலம் நகரச் செயலாளர் கே.ஏ.ராஜ்குமாரிடம் பேசினோம். 'ஆடி முடிந்து ஆவணியில் பால் காய்ச்சி விருத்தாசலத்தில் அண்ணியார் குடியேறுகிறார். அதிகாரிகளை யாரும் மிரட்டவில்லை. எங்களிடமே 'அமைதியாகக் கேட்டால் அதிகாரிகள் செய்வார்கள்' என்றுதான் அண்ணியார் கூறியிருக்கிறார். எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தினந்தோறும் மனுக்கள் கொடுக்கும்போதே பரிந்துரை கடிதம் வழங்கி தீர்வு கண்டு வருகிறோம். மூன்று நாட்களில் மட்டுமே 470 கோரிக்கைகள் நிறைவேறியிருக்கின்றன.
ஊராட்சிகளில் பணிதளப் பொறுப்பாளர்களாக எம்.எல்.ஏ. பரிந்துரை செய்பவர்களைத்தான் அதிகாரிகள் நியமித்துவந்தார்கள். அதனைத்தான் நாங்கள் கேட்டிருக்கிறோம். மற்றபடி அண்ணியார் இந்த தொகுதிக்கு முதல்வர் என்று சொன்னதாக கூறுவதில் துளியளவு உண்மையும் இல்லை" என்றார்.
நல்லது நடக்கட்டும்!