நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காவல்துறை தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிகையில், தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன. அந்த காலகட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் சில தேர்தல் விதிமுறைகளை மீறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2-ம் தேதி உடுமலைப்பேட்டை - தாராபுரம் சாலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதி பெறாமல் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பேனரை அகற்றும்படி போலீசார் பலமுறை அறிவுறுத்தியதாகவும், ஆனால் அது அகற்றப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் காவல்துறையினரிடம் அவதூறாகப் பேசியதாகக் கூறி சஞ்சய் காந்தி, ஷேக் பரித் ஆகியோர் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்திகா தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. அப்போது அனுமதியின்றி கூட்டமாகச் சேர்ந்தது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, போலீசாரின் பணிக்கு இடையூறு செய்தது, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது, சாலை மறியலில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கார்த்திகா உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு விவகாரம் முடிந்துவிடவில்லை என்கிறது போலீஸ் தரப்பு.
கடந்த 4-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டு அணிந்திருந்த ஒருவரையும் அவரது மனைவியையும் கார்த்திகா தாக்கியதாகவும் ஒரு புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதே நாளில் முதலமைச்சர் தாராபுரம் வந்திருந்தபோது, அனுமதியின்றி திடீரெனக் கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் செயல்பட்டதாகக் கூறி, கார்த்திகா உள்ளிட்ட 57 பேர் மீது தனியாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இப்படி அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பின்னரே கார்த்திகா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம், தேர்தல் நேரத்தில் நடந்த விதிமீறல்களுக்காகத்தான் நடவடிக்கை என போலீஸ் கூறுகிறது. மறுபக்கம், கார்த்திகா கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இதனால் தாராபுரம் இடைத்தேர்தல் முடிந்த பிறகும், கார்த்திகா கைது விவகாரம் அரசியல் களத்தில் இன்னும் சூட்டை கிளப்பி வருகிறது.