ம துரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் அழகர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.79 ஏக்கர் அறக்கட்டளை நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றி, பத்திரப்பதிவு மற்றும் அடமானம் செய்ததாக 19 பேர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். பழனி, காரைக்குடி, மதுரை என கோயில் நிலங்கள் இப்படி சூறையாடப்படுவது, பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது!
இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோயிலின் இணை ஆணையரும், செயல் அலுவலருமான செல்லத்துரையிடம் கேட்டோம். "1930ம் ஆண்டு சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் 'புதுக்கோட்டை ராஜகுமாரர் தட்சிணாமூர்த்தி துரைராஜா துரைராணி அறக்கட்டளை' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட உயில் படி இந்த சொத்துகள் உருவாக்கப்பட்டன. மதுரை, அழகர் கோயில் சாலை மற்றும் 10வது வார்டு ஹக்கீம் அஜ்மல்கான் சாலையில் அமைந்துள்ள 'அசோகா விலாஸ்' பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம் ஆகிய 1.79 ஏக்கர் சொத்துகள் இதில் அடங்கும். இவற்றை வாடகைக்குவிட மட்டுமே அனுமதி உண்டு.
விற்கவோ, அடமானம் வைக்கவோ உரிமை மாற்றவோ அனுமதி இல்லை. இந்நிலையில், 24.06.2016 அன்று அப்போதைய வட்டாட்சியர் அன்பழகன், கோயில் பெயரில் இருந்த சொத்துரிமையை நீக்கி, இராமாயி ஆயியார் உள்ளிட்ட 9 பேரின் பெயரில் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் பட்டா மாற்றம் செய்துள்ளார்" என்றார்.
இதுகுறித்து பேசும் வருவாய்த்துறை அதிகாரிகள், "இந்த விவகாரத்தில் அப்போதைய வி.ஏ.ஓ. அரசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வட்டாட்சியர் அன்பழகன் மீதும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. வட்டாட்சியரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கோயில் பெயரிலேயே பட்டா மாற்ற உத்தரவிடப்பட்டது. 2021ல் சென்னை ஹைகோர்ட் வழக்கில் இதற்கு இடைக்காலத் தடை ஆணை வழங்கியது. இந்தச் சொத்தை பதிவு செய்யக் கூடாது என அறநிலையத்துறை சார்பில் சொக்கிக்குளம் சார்பதிவாளர் மற்றும் மதுரை மாவட்டப் பதிவாளருக்கு முன்னரே கடிதம் எழுதப்பட்டிருந்தது.
இருப்பினும், நீதிமன்றத் தடையை மறைத்து குற்றவியல் கூட்டுச் சதியில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு இடங்களில் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்" என்றனர்.
மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸாரோ, 16.04.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு சார் பதிவாளர் என்பவருக்கு இளையராஜா பவர் கொடுத்திருக்கிறார். பிறகு திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் இளையராஜா வீட்டு செலவிற்காக பணம் இல்லாததால் அவரின் மனைவியிடம் 5 லட்சத்திற்கு அடமானம் வைத்ததாக பதிவு செய்திருக்கிறார்கள்.
இங்கேதான் மாட்டியிருக்கிறார் இளையராஜா. இந்த இளையராஜா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அலுவலகத்தில், அனந்தராமன் எனும் சார் பதிவாளர் மூலம் பொது அதிகார ஆவணம் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், 19.07.2021 அன்று திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை சார்பதிவாளர் பிரசாந்த் சந்தானகருப்பன் மூலம் நில அடமானப் பத்திரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது என மீனாட்சி அம்மன் கோயிலின் இணை ஆணையர் செல்லத்துரை புகாரில் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் ஆவணங்களை ஆய்வு செய்து கடந்த ஜூலை 25ம் தேதி இராமாயி ஆயியார், முன்னாள் வி.ஏ.ஓ. அரசன், முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், இளையராஜா, முறப்பநாடு சார்பதிவாளர் அனந்தராமன், வடமதுரை சார்பதிவாளர் பிரசாந்த் சந்தானகருப்பன் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்கள்.
இதுகுறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமனிடம் கேட்டபோது "சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை திருநெல்வேலி, ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு விற்பதாக கிரையப் பத்திரம் பதிவு செய்யப்பட்டது.
இளையராஜா பெயரிலேயே பட்டா இல்லாதபோதும், அந்த சொத்தை பாலாஜி எப்படி வாங்க சம்மதித்தார்? எனவே, அதில் முறைகேடு இருப்பதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. அதை விசாரித்த ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவு தலைவர், கடந்த 2023, ஜூலையில் அந்தப் பதிவை ரத்து செய்தார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்தை 2021ல் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் அனீஸ் இருக்கும் அரசிற்கு சொந்தமான ஒரு அரண்மனையை அவருடைய பெயருக்கு பதிவு செய்திருக்கிறார். அங்கேயும் இளையராஜா மீது வழக்கு இருக்கிறது.
1908ம் ஆண்டு பதிவுச் சட்டத்தின் பிரிவு 28ன்படி, ஒரே ஆவணத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பல சொத்துகள் இடம்பெற்றிருந்தால், ஏதாவது ஒரு சொத்து அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திலேயே ஒட்டுமொத்த ஆவணத்தையும் பதிவு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இதை மோசடிக்காரர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்" என்றார்.
இதுகுறித்து நயினார் பாலாஜியிடம் விளக்கம் கேட்சு பலமுறை தொடர்புகொண்டும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் அவரின் ஆதரவாளர்களிடம் பேசினோம். "விருகம்பாக்கம் சொத்து பவர் வாங்கும் முன் சட்டரீதியாக அரசு வழக்கறிஞர் ஒருவரிடம் ஆவணங்களை ஆய்வு செய்தோம். அதன் பின்னர்தான் ஒப்பந்தம் போடப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாலாஜி மீது வீண் பழி சுமத்துகின்றனர்" என்றனர்.
மோசடி குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இளையராஜாவிடம் விளக்கம் கேட்டோம். "ஆர்டிஓ, டி.ஆர்.ஓ. நீதிமன்ற உத்தரவு பெற்று அதன்பிறகுதான் பட்டா வாங்கியிருக்கிறேன். சட்ட விதிமீறல்கள் எதுவும் இல்லை. திருவனந்தபுரத்தில் என் மீது வழக்கு இல்லை. சென்னையில் உள்ள சொத்தின் பதிவு ரத்து செய்யப்பட்டது" என்றார்.
தோண்ட தோண்ட பூதங்கள்!