Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

கரூர் துயரம்: பிரசார கூட்டத்துக்கு தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்- துணை முதல்வர் உதயநிதி

By Christon
28 Sep 2025, 11:06 AM
"கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிப் உயிரிழந்தவர்களின் உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (செப். 28) நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடமும் அவர் கேட்டறிந்தார்.

'முதலமைச்சரால் துயரத்தை தாங்க முடியவில்லை'

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தச் சம்பவம் குறித்துப் பேசுகையில், "முதலமைச்சர் உத்தரவின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 39 பேர் உயிரிழந்த துயரத்தை முதலமைச்சரால் தாங்க முடியவில்லை" என்று குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் 17 பெண்கள், 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல்லைச் சேர்ந்த தலா 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மருத்துவர்களிடமும் நான் தனித்தனியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளேன். அண்டை மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 3 மாவட்ட ஆட்சியர்கள் மீட்பு, நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும்" என்று உறுதி அளித்தார்.

'தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்'

மேலும், இந்தக் கூட்ட நெரிசல் விபத்துக்கான காரணங்கள் குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எடப்பாடி பழனிசாமி அதே இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கூட்டம் நடத்தியுள்ளார்" என்று சுட்டிக்காட்டினார்.

"கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது தவெக.வினரின் கடமை. கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்" என்று அவர் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற விபத்துகள் இனிமேலும் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்" என்று கூறினார்.