Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்ற வரலாற்றை மாற்ற முடியாது – திருமாவளவன் கருத்து

By Jayakumar
28 May 2025, 03:47 PM
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது, வரவேற்கத்தக்கது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தீர்ப்பை வரவேற்கிறேன்

அப்போது பேசிய அவர், “திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.இதேபோல் திமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள வில்சன், கவிஞர் சல்மா உள்ளிட்ட மூன்று பேருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோன்.

அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருப்பது ஆறுதலை தருகிறது. இதனை வரவேற்கிறேன்.

கமல் கருத்து எதிர்ப்பு

மேலும் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக எதிர்கட்சிகள், ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்களை கூறுவது வியப்பாக உள்ளது. இந்த விவகாரத்தில் நேர்மையாக தான் விசாரணை நடந்துள்ளது.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் இருந்தால், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். சிபிஐ விசாரணை கேட்கலாம்” என தெரிவித்தார்.

மேலும், தமிழில் இருந்தே கன்னடம் உள்ளிட்ட மொழிகள் வந்ததாக கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

உண்மையை ஏற்க தயங்கலாம்

அதற்கு பதில் அளித்த அவர், தமிழ் தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை தேவனாய பாவணர் போன்ற தமிழ் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் உறுதிப்படுத்தி உள்ளார்கள்.
இன்று கன்னடம், மலையாளம் பேசுபவர்கள் அந்த உண்மையை ஏற்க தயங்கலாம். ஆனால் வரலாறு, வரலாறு தான். இது தான் உண்மை என தெரிவித்தார்.