அரசியல்

"அவதூறு பேச்சு": எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

By Christon
15 Apr 2026, 01:33 PM
முதலமைச்சர்ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தேர்தல் களம் அனல் பறந்து வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் பிரசாரங்களில் ஆளுங்கட்சித் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், புரட்சி அதிமுக-வின் முதன்மைச் செயலாளர் புகழேந்தி, எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்திற்குத் தடை விதிக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சர்ச்சை பேச்சுகள்

அந்த மனுவில், "எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு பிரசாரம் மேற்கொள்கிறார். கொரோனா காலத்தில் அவர் மறைந்திருப்பார் என்பது போன்ற தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்கிறார். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை 'பால்டாயில் குடித்தவர்' எனக் குறிப்பிட்டு இழிவுபடுத்திப் பேசுகிறார்" என்று புகழேந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

நடவடிக்கை கோரிக்கை

அரசியல் கண்ணியத்தைத் தாண்டி பல்வேறு தலைவர்களையும் அவதூறாகப் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது தேர்தல் பிரசாரத்திற்குத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.