அரசியல்

சீமான் குறித்து அவதூறு: ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? காவல்துறையை விளாசிய நீதிபதி!

By Christon
28 Jul 2026, 05:41 PM
சீமான் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், யூடியூபர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

காவல் துறைக்கு நீதிபதி கேள்வி

யூடியூபர் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் சீமான் குறித்துத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, "முதலமைச்சர் குறித்து திமுக எம்.எல்.ஏ அவதூறாகப் பேசியதற்காக உடனடி வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்த காவல்துறை, சீமான் விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.

கடுமையான கண்டனம்

விசாரணையின்போது, ஒரு தலைவர் குறித்து மிகவும் கொச்சையாகவும் தரக்குறைவாகவும் விமர்சிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, இவ்விவகாரத்தில் காவல்துறை பாரபட்சமாகச் செயல்படுகிறதா என்றும் வினவினார்.

தொடர்ந்து, சம்பந்தப்பட்ட யூடியூபர்கள் இருவரும் மீது இன்றே தொடர்புடைய காவல் நிலையங்களில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அதுகுறித்த அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும் எனத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.