தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி மோசடியில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்ட சரவணன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் அன்பில் மகேஷ். இவர் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி, பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.400 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கடந்த மாதம் 26-ம் தேதி அன்பில் மகேஷை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அவரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று(நவ.,10) தீர்ப்பளித்த நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, அன்பில் மகேஷின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று முறையிட்டார். அப்போது, மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகளை இன்று மதியத்திற்குள் முடித்துவிட்டால், நாளை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும், தனியார் பள்ளிகளிடம் நிதி வசூலித்த விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்திருந்த மற்றொரு வழக்கின் விசாரணையை, வழக்கறிஞர் வில்சன் கோரிக்கையை ஏற்று வரும் 30-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
தலைமறைவாக இருந்த சரவணன் நீதிமன்றத்தில் சரண்!
இதற்கிடையே, இந்த ரூ.400 கோடி மோசடி வழக்கில் கைதாகியுள்ள திமுக பிரமுகர் முத்துக்குமாரின் கார் ஓட்டுநராக இருந்த சரவணன், தற்போது நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
பள்ளி நிர்வாகிகளிடம் முத்துக்குமார் வசூலித்த பணத்தை அன்பில் மகேஷின் வீட்டுக்குக் கொண்டு சென்று கொடுத்தவர் சரவணன் என போலீசார் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இதனால், இந்த வழக்கில் சரவணன் முக்கிய நபராகக் கருதப்பட்டார்.
சரவணன் தலைமறைவாக இருப்பதாகக் கூறி, அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என போலீசார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது சரவணன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளது இந்த வழக்கில் கவனம் பெற்றுள்ளது.
ஏற்கெனவே ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அன்பில் மகேஷ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மறுபுறம், வழக்கில் முக்கிய நபராகக் கூறப்படும் சரவணனும் சரணடைந்துள்ளார்.
இதனால், நாளை விசாரணைக்கு வரவுள்ள அன்பில் மகேஷின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவில் என்ன முடிவு எடுக்கப்படும்? அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.