இந்தியா

மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம்... முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு!

By Sumalekha
26 Jun 2026, 04:22 PM
மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் (UCC) அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். குஜராத், உத்தராகண்ட், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையை மேற்கு வங்கத்திலும் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும். அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பான விரிவான தகவல்களை வரும் திங்கள்கிழமை சட்டப்பேரவையில் அறிவிப்பேன் என்றார்.

மேலும், மம்தா பானர்ஜி தலைமையிலான முந்தைய ஆட்சியில் ஊழல் மற்றும் வாரிசு அரசியலே மாநிலத்தின் அடையாளமாக இருந்தது. தற்போது தேசியவாத அரசு ஆட்சியில் இருப்பதால், மேற்கு வங்கத்தின் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்என்றும் சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டினார்.

இந்த ஆண்டு வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு என்பதையொட்டி, தேசிய அளவிலான அருங்காட்சியகம் அமைக்கும் திட்டத்தையும் அரசு அறிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது கோவா, உத்தராகண்ட், குஜராத், அசாம் ஆகிய மாநிலங்களில் பொது சிவில் சட்டம் நடைமுறையில் உள்ளது அல்லது சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் மகாராஷ்டிராவிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.