ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத் அருகே கடும் வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, 18 மாதக் குழந்தையைத் தாய் ஒருவரே சாக்கடையில் வீசிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபரிதாபாத் அருகே உள்ள பல்லா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு சாக்கடையில், இரும்பு வலையில் சிக்கிய நிலையில் ஒரு பச்சிளம் குழந்தையின் சடலம் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் இருவர் இதைக் கண்டு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், அந்தக் குழந்தை 18 மாதமே ஆன சிறுமி என்பதும், அவர் உயிருடன் இருக்கும்போதே சாக்கடையில் வீசப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகளால் சிக்கிய தாய்
இந்த வழக்கில் துப்பு துலக்க அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ஒரு பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு செல்வதும், சிறிது நேரம் கழித்து அவர் தனியாகத் திரும்பி வருவதும் பதிவாகியிருந்தது. அந்த அடையாளங்களை வைத்து பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த நீலம் என்பவரைப் பிடித்துப் போலீசார் விசாரித்தபோது, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
வாக்குமூலத்தில் உருக்கம்
குற்றம் சாட்டப்பட்ட நீலம், தனது கணவர் சஞ்சயுடன் ஃபரிதாபாத்தில் ஒரு குடிசைப் பகுதியில் வசித்து வருகிறார். அவர்களுக்கு ஏற்கனவே ஐந்து பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஆறாவதாகப் பிறந்த இந்தப் பெண் குழந்தையை வளர்க்கத் தன்னிடம் வழியில்லை என்று அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். குடும்பத்தின் வறுமை நிலை மற்றும் நிதி நெருக்கடியால் ஏற்பட்ட மன உளைச்சலே இத்தகைய கொடூர முடிவை எடுக்கக் காரணமாக இருந்ததாக அவர் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.