புனே மாவட்டம் ககுஞ்சே பகுதியைச் சேர்ந்த கேத்தன் அகர்வால் (26), குடும்பத்துக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். இவருக்கும் சியா கோயல் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ராஜஸ்தானின் உதய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கடந்த ஜூன் 18-ம் தேதி லோனாவாலா அருகே உள்ள லோகாகட் கோட்டைக்கு சியா கோயலுடன் மலையேற்றத்திற்குச் சென்ற கேத்தன், சுமார் 400 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். பலத்த காற்றில் புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்ததாக சியா கோயல் போலீஸிடம் தெரிவித்ததால், முதலில் இது விபத்து மரணமாகவே பதிவு செய்யப்பட்டது.
ஆனால், மரணத்தைச் சுற்றிய சூழ்நிலைகளில் சந்தேகம் வலுவாக எழுந்ததால், காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, சியா கோயலுக்கு சேத்தன் சௌத்ரி என்ற இளைஞருடன் காதல் இருப்பது தெரியவந்ததுள்ளது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், கேத்தனை திருமணம் செய்ய சியாவுக்கு விருப்பம் இல்லாததும், காதலன் சேத்தனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக கேத்தனை தடையாகக் கருதியதும் வெளிச்சத்துக்கு வந்தது. இதனால், இருவரும் சேர்ந்து கேத்தனை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 18-ம் தேதி லோகாகட் கோட்டைக்கு அழைத்துச் சென்று, கோட்டையின் உச்சிப் பகுதியில் இருந்து கேத்தனை கீழே தள்ளி கொலை செய்ததாகவும், இதற்கு முன்பே பாம்பு தாக்குதல் நாடகத்தை அரங்கேற்றி, ஜூன் 14-ம் தேதி அவரை பள்ளத்தில் தள்ள முயன்றும் அது தோல்வியடைந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, திருமணத்திற்கு முன் பாலி சுற்றுலாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், சியா தனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாகக் கூறி அந்தப் பயணத்தை ரத்து செய்திருந்தார். பின்னர், அவர் வேண்டுமென்றே பாஸ்போர்ட்டைக் கிழித்து எறிந்தது விசாரணையில் அம்பலமானது.
கேத்தனின் தந்தை விஷால் அகர்வால் அளித்த புகாரின் பேரில், கொலை மற்றும் குற்றவியல் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சதியில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.