Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

25 இடங்களில் காயம்.. கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல்.. பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

By leninakathiya
20 Aug 2024, 01:08 PM
பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், கடந்த 8-ம் தேதி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்த நிலையில், சம்பவம் தொடர்பாக CBI விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொல்லப்பட்ட தனது மகளுடன் பணிபுரிந்த சில பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறி அவர்களது பெயர்களுடன் மாணவியின் பெற்றோர் புகாரளித்தனர். அத்துடன் நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே வேளையில் சம்பவம் நடந்த மருத்துவமனை, போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. அதில், இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த மருத்துவருக்காக நீதி கேட்டும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த 10 நாட்களாக நடந்து வரும் போராட்டம் காரணமாக பல இடங்களில் மருத்துவத்துறை முடங்கி வருகிறது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், “கையால் கழுத்தை நெரித்ததால், மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்துள்ளது என்றும், பாலியல் வன்கொடுமையும் நடந்ததற்கு மருத்துவ ரீதியிலான ஆதாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண் பயிற்சி மருத்துவரின் கன்னம், உதடு, மூக்கு, கழுத்து, கைகள் என உடலின் வெளிப் பகுதியில் 16 இடங்களிலும், கழுத்து தசை, உச்சந்தலை என உள் பகுதியில் 9 இடங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அவர் கடுமையாக போராடி உள்ளார் என தெரிகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இது தவிர, படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் விரல் நகத்தில் இருந்த ரத்த மாதிரியும், கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் ரத்த மாதிரியும் ஒன்றுபோல இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால், கொலையில் சஞ்சய் ராய்க்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.