மஹாராஷ்டிர மாநிலத்தில் மனைவியின் முன்னிலையில் பெற்றோர் திட்டியதால் ஆத்திரமடைந்த மகன், உலக்கையால் அடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள ஷிர்பூர் மகாவிர் சொசைட்டி பகுதியில் நேற்று மதியம் இக்கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வசித்து வந்த இந்தாராம் மஹதோ மற்றும் ரஞ்சுதேவி மஹதோ ஆகிய தம்பதியினர், தங்களது மகளின் திருமணத்தை முடித்துவிட்டு நேற்று வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது, அவர்கள் தங்களது மகன் சந்தன் இந்தாராம் மஹதோவை அவரது மனைவியின் முன்னிலையில் கடுமையான வார்த்தைகளால் திட்டி, அவமதித்ததாகக் கூறப்படுகிறது.
மனைவியின் முன்னிலையில் பெற்றோர் தன்னைத் தரம் தாழ்த்திப் பேசியதால் ஆத்திரமடைந்த சந்தன், வீட்டில் இருந்த உலக்கையை எடுத்துப் பெற்றோர் இருவரின் தலையிலும் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தாய் ரஞ்சுதேவி மற்றும் தந்தை இந்தாராம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெற்றோரைக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்ற சந்தனை, அக்கம் பக்கத்தினர் மடக்கிப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சந்தனைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.