Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

எனக்கு 20..உனக்கு 40.. காதலனை தீர்த்துக்கட்டிய உறவினர்கள்... இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்!

By JANANI
02 Dec 2024, 05:56 PM
கர்நாடகாவில் 20 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த 40 வயது நபர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் வீட்டார் விரித்த வலையில் 40 வயது நபர் சிக்கியது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே கோணனுார் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவருக்கு 40 வயது ஆகிறது. இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேறு சமூகத்தை சேர்ந்த ஷில்பா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில், திருமணமான 5 ஆண்டுகளில், குடும்ப தகராறு முற்ற மன உளைச்சலில் ஷில்பா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், அவரை தற்கொலைக்கு துாண்டியதாக, மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து வெளியான மஞ்சுநாத்திற்கு இன்னொரு காதல் மார்ந்துள்ளது. அதாவது, அவரது சமூகத்தை  சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும் இவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு, அது  காதலாக மாறியது. ஆனால், இருவரின் வயதை காரணம் காட்டி இளம்பெணின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால்,  கடந்த 20 நாட்களுக்கு முன் இருவரும் கோயிலில் திருமணம் செய்தனர். விஷயம் அறிந்து கோயிலுக்கு சென்ற இளம்பெண்ணின் பெற்றோர் முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறி, இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், நவம்பர் 27ம் தேதி திருமண வேலைகளை பற்றி பேசுவது போல் மஞ்சுநாத்தின் வீட்டிற்குள்   இளம்பெண்ணின் உறவினர்கள் 20 பேர் சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத நேரத்தில் மஞ்சுநாத், அவரது தந்தை சந்திரப்பா, தாய் அனுசுயா ஆகியோரை மரக்கட்டைகளால் இளம்பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், அவரது பெற்றோர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, பரமசாகரா போலீசார் 20 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அந்த இளம்பெண்ணும், மஞ்சுநாத்தும் பேசிய தொலைபேசி உரையாடல் ஆடியோ ஒன்று வெளியானது. அதில், என்னை காதலிக்க வேண்டாம் என மஞ்சுநாத் கூறியும் கேட்காமல் நீங்கள் தான் எனக்கு வேண்டும், என்னை உங்களோடு அழைத்துச் செல்லுங்கள் என இளம் பெண் வற்புறுத்தியிருக்கிறார். இந்த ஆடியோவை கைபற்றி மேலும் விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.

20 வயது இளம்பெண்ணை காதலித்ததால் 40 வயது நபர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.