இந்தியா

ஹைதராபாத்தில் டிரம்ப் பெயரில் சாலை... பின்னணியில் என்ன ?

By Sumalekha
24 Jun 2026, 02:58 PM
அமெரிக்கா - இந்தியா உறவின் அடையாளமாக, ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ‘தெலங்கானா ரைசிங்’ மாநாட்டின்போது, இந்தியா - அமெரிக்கா கூட்டாண்மையில் ஹைதராபாத்தின் வளர்ந்து வரும் பங்கைக் குறிக்கும் வகையில், நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றுக்கு டிரம்பின் பெயர் சூட்டப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்திருந்தார்.

அதன்படி, ஹைதராபாத்தின் நிதி மையமாக திகழும் நானக்ராம்குடாவில், அமெரிக்க தூதரகத்தை ஒட்டியுள்ள முக்கிய சாலை தற்போது ‘டொனால்ட் டிரம்ப் அவென்யூ’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் மற்றும் தெலங்கானா துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா, “ஹைதராபாத் குடும்பங்களுக்கு அமெரிக்கா என்பது வரைபடத்தில் இருக்கும் ஒரு நாடு மட்டுமல்ல; பாஸ்டனில் இருக்கும் மகன், நியூ ஜெர்சியில் இருக்கும் மகள், சீட்டிலில் இருக்கும் நண்பன் என குடும்ப உறவுகளோடு பின்னிப் பிணைந்த ஒரு உணர்வு.

‘டொனால்ட் டிரம்ப் அவென்யூ’ என்பது வெறும் சாலைப் பெயரல்ல; மாணவர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் கனவுகளோடு பயணிக்கும் பலரின் பாதையாக இது அமையட்டும்” என்று தெரிவித்தார்.