மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பழைமையான குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மன்குர்த் பகுதியில் உள்ள ஜனதா நகரில் நேற்று (ஜூலை 05) இரவு இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள அனுமன் கோவில் அருகே இருந்த மூன்று அடுக்குகள் கொண்ட குடியிருப்பின் ஒரு பகுதி, பெய்து வந்த கனமழை காரணமாக இரவு சுமார் 8.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கிருந்த பொதுமக்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மும்பை தீயணைப்புத் துறை, உள்ளூர் போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஒரு பெண் மற்றும் 5 குழந்தைகள் (3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள்) பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். காயமடைந்த இளைஞர் ஒருவர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து நடந்த இடத்திற்குப் பகுதி எம்.எல்.ஏ அபு ஆசிம் ஆஸ்மி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். மும்பை மாநகராட்சி மேயர் ரிது தாவ்டே மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த ஆறுதல்களைத் தெரிவித்தார். இடிந்து விழுந்த கட்டிடம் ஏற்கனவே சற்று சேதமடைந்த நிலையில் இருந்ததாகவும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.