இந்தியா

Surf Excel: கறை நல்லது.. ஒரே ஆண்டில் 10 ஆயிரம் கோடி டர்ன் ஓவர்!

By MUTHUKRISHNAN
31 May 2025, 10:02 AM
கறை நல்லது என தொலைக்காட்சிகளில் வரும் துணி சலவை பவுடர் சர்ப் எக்செல் விளம்பரமானது பலரின் விருப்பத்திற்குரிய விளம்பரங்களில் ஒன்றாகும். விளம்பரத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் பலரின் விருப்பத் தேர்வாக Surf Excel இருந்துள்ளது என்பது ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் வெளியிட்ட நிதி அறிக்கையின் வாயிலாக தற்போது தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL- Hindustan Unilever Limited), 2024-25 நிதியாண்டிற்கான (FY25) தனது நிதி அறிக்கை முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடும் போட்டிகளுக்கு மத்தியிலும் நிறுவனம் நிலையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

ஹோம்கேர் பொருட்கள், பியூட்டி& வெல்பிஃயிங் பொருட்கள், பர்சனல் கேர் பொருட்கள் மற்றும் உணவுப்பொருள் போன்றவற்றின் தயாரிப்புகளில் மிக முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் கம்பெனி FY-25 இல் மட்டும் ஒட்டுமொத்தமாக ₹60,680 கோடி டர்ன்-ஓவர் செய்துள்ளது. விற்பனை வளர்ச்சி விகிதமானது, அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. அதேப் போல் மொத்த உற்பத்தியானது 2 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

வளர்ச்சிக்கு உதவிய ஹோம்கேர் தயாரிப்புகள்:

HUL நிறுவனம் FY-25 இல் மட்டும் ஒட்டுமொத்தமாக ₹60,680 கோடி டர்ன்-ஓவர் செய்துள்ள நிலையில், இதில் பெரும் பங்காற்றியிருப்பது ஹோம்கேர் தயாரிப்புகள் தான். Surf Excel, Rin, Wheel, Sunlight, Active Wheel, Comfort, vim, Domex போன்ற தனது ஹோம் கேர் தயாரிப்புகள் வாயிலாக மட்டும் ₹22,972 கோடி கிடைத்துள்ளதாக வெளியான 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ஹிந்துஸ்தான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவரின் பிரபலமான தயாரிப்பு என்றால் அது துணி சலவை பவுடர் பிராண்டான சர்ப் எக்செல் தான். 1959 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்ப் எக்செல், FY22-இல் ₹8,200 கோடி விற்பனையைப் பதிவு செய்த நிலையில்,FY-25 இல் மட்டும் ₹10,000 கோடிக்கு மேல் டர்ன் ஓவர் செய்துள்ளது.

HUL நிறுவனத்தின் ஸ்கின் கேர் மற்றும் கலர் காஸ்மெடிக்ஸ் தயாரிப்புகளின் விற்பனை ஒரளவு வளர்ச்சியை (3%) சந்தித்துள்ளன. Axe,Rexona,Denim,Close-Up,Pepsodent போன்ற பர்சனல் கேர் தயாரிப்புகளின் விற்பனையும் 3% வளர்ச்சியை அடைந்துள்ளன. உணவுப்பொருள் தயாரிப்புகள் தான் தொடர்ந்து சரிவினை நோக்கி செல்கின்றன. FY-25 லும் உணவுப்பொருள் தயாரிப்புகளின் விற்பனையானது 1% வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.

குவாலிட்டி வால்ஸ் (Kwality Wall's), கோர்னெட்டோ (Cornetto) மற்றும் மேக்னம் (Magnum) போன்ற பிராண்டுகளை உள்ளடக்கிய ஐஸ்கிரீம் வணிகத்தை நிறுவனத்திலிருந்து தனியாக பிரிக்கும் முடிவை ஹிந்துஸ்தான் யூனிலீவர் அறிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஜஸ்கிரீம் விற்பனையானது தொடர்ந்து சரிவினை நோக்கி செல்வது தான்.

HUL நிறுவனத்தின் CEO மற்றும் MD ரோஹித் ஜாவா., நிதியாண்டு நிதிநிலை வருவாய் குறித்து கூறுகையில், ”"வீட்டு பராமரிப்பு வணிகத்தில், நாங்கள் எங்கள் வளர்ச்சிப் பாதையைத் தக்க வைத்துக் கொண்டோம். எங்களது மிகப்பெரிய பிராண்டான சர்ஃப் எக்செல், ₹10,000 கோடி வருவாயைக் கடந்துள்ளது. கிராமப்புறங்களிலும் எங்களது வணிகத்தை விரிவுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளோம். நுகர்வோர் விரும்பும் பிராண்டுகளை உருவாக்க தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.