நடிகர் விக்ரம் அரிய வகை குரங்குடன் நெருக்கமாக பழகும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையான நிலையில், தற்போது நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரிய வகை குரங்கான லார் கிப்பானை (Lar Gibbon) வைத்திருப்பது தொடர்பான ஆவணங்கள் மற்றும் அதன் சட்டப்பூர்வ நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வனத்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என வனத்துறை அனுப்பியநோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குரங்கு ஒன்றுடன் விளையாடும் வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், அரிய வகையைச் சேர்ந்த குரங்கை தனது மடியில் வைத்துக்கொண்டு விக்ரம் கொஞ்சுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. குரங்கு செய்யும் முகபாவனைகளைப் போலவே விக்ரமும் செய்து காட்டியிருந்தார்.
விக்ரமின் ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ வரவேற்பைப் பெற்றாலும், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்கள் மத்தியில் சில முக்கியமான கேள்விகள் எழுந்தன. குறிப்பாக, வீடியோவில் இடம்பெற்றிருந்த குரங்கு அரிய வகையைச் சேர்ந்தது என கூறப்பட்டதால், அதை வீட்டில் வைத்து வளர்க்க அனுமதி உள்ளதா என்ற விவாதம் உருவானது.
விக்ரம் வெளியிட்ட வீடியோவில் இருந்த குரங்கு ‘லார் கிப்பான்’ (Lar Gibbon) இனத்தைச் சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. அழிவின் விளிம்பில் உள்ள அரிய விலங்கினங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த குரங்கு, சர்வதேச அளவில் பாதுகாப்பு தேவைப்படும் உயிரினமாக உள்ளது.
வனவிலங்குகளின் சர்வதேச வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் மற்றும் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் இந்த வகை உயிரினங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதனால், இதுபோன்ற குரங்கை தனிநபர்கள் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பது தொடர்பாக சட்ட விதிமுறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இதன் காரணமாகவே, விக்ரம் வெளியிட்ட வீடியோ வனத்துறை கவனத்தையும் பெற்றது. குரங்கு யாருக்குச் சொந்தமானது? அது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதை வைத்திருப்பதற்கான உரிய அனுமதி மற்றும் ஆவணங்கள் உள்ளனவா? என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டது.
இந்த குரங்கு நடிகர் விக்ரமின் சம்பந்தியும், கெவின்கேர் நிறுவனத்தின் நிறுவனருமான சிகே ரங்கநாதனுக்கு சொந்தமானது என தகவல்கள் வெளியாகின. அந்த குரங்கு மணிப்பூரில் இருந்து வாங்கி வரப்பட்டதாகவும் சில தகவல்கள் கூறின. ஆனால், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இதையடுத்து சென்னை வனவிலங்கு வார்டன் யோகன் குலாலா உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் சிகே ரங்கநாதனிடம் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அவரது வீட்டிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது லார் கிப்பான் குரங்கை வைத்திருப்பது தொடர்பான உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதிகள் குறித்து அதிகாரிகள் விசாரித்ததாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது நடிகர் விக்ரமிடமும் வனத்துறை விளக்கம் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் விக்ரமுக்கு வனத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நேற்று விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது, அதிகாரிகள் நேரில் சென்று நோட்டீஸை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்டது தொடர்பாக விக்ரம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், குரங்கின் உரிமை மற்றும் அதை வைத்திருப்பது தொடர்பான ஆவணங்கள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், லார் கிப்பான் குரங்கு தொடர்பான ஆவணங்களை நாளை மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், நோட்டீஸுக்கு மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விக்ரம் ஏற்கனவே சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். எனினும், வீடியோ இணையத்தில் பரவியதையடுத்து வனத்துறை விசாரணை வரை விவகாரம் சென்றுள்ளது.
தற்போது வனத்துறை கேட்கும் ஆவணங்கள் மற்றும் விக்ரம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது. குரங்கை வைத்திருப்பதற்கான சட்டப்பூர்வ ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுகிறதா, குரங்கின் உரிமை மற்றும் அதன் வருகை தொடர்பான விவரங்கள் என்ன என்பது விசாரணையில் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விக்ரம் தரப்பில் இதுவரை விரிவான விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. ஒரு சமூக வலைதள வீடியோவாக தொடங்கிய இந்த விவகாரம் தற்போது வனத்துறை நோட்டீஸ் வரை சென்றுள்ளதால், அடுத்ததாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.