சினிமா

6 மணிக்கு FDFS...திரைப்படத்திற்கும், போதைக்கும் முன்னுரிமை....சீமானுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் பதிலடி!

By Bhavani
06 Nov 2026, 11:55 AM
தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கான அதிகாலை 6 மணி காட்சிகள் அனுமதி குறித்த சீமானின் கருத்துக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் பதிலளித்துள்ளது.

தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கான அதிகாலை 6 மணி காட்சிகளை அனுமதித்த விவகாரம் தற்போது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் நேரம், கல்வி, வேலைவாய்ப்பு குறித்து சீமான் எழுப்பிய கேள்விகளுக்கு, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் விரிவான விளக்கத்துடன் பதிலளித்துள்ளது.

முன்னதாக சீமான் வெளியிட்டிருந்த அறிக்கையில் "தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்த திரைப்படக் காட்சி நேரங்களில் என்ன குறை இருந்தது? வார இறுதி நாட்களிலும், விழாக் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் கூடுதல் காட்சிகளைத் திரையிடும் நடைமுறை ஏற்கனவே இருந்ததுதானே? அதில் என்ன சிக்கல்? அவ்வாறு திரையிடப்பட்டபோதுதானே பல திரைப்படங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்துக் குவித்தன? இப்போது புதிதாக அதிகாலை 6 மணிக்கே காட்சிகளைத் தொடங்க வேண்டிய தேவை என்ன வந்துவிட்டது? ஒரு வாரத்திற்கு இரண்டு புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்தப் படங்கள் திரையரங்குகளை விட்டு வெளியேறுவதற்குள் அடுத்தடுத்த திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. 

ஒவ்வொரு புதிய திரைப்படத்திற்கும் அதிகாலை முதலே காட்சிகளைத் தொடங்கினால், மக்கள் எப்போது படிப்பார்கள்? எப்போது உழைப்பார்கள்? எப்போது தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வார்கள்? எப்போது தங்களது அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வார்கள்? நாள் முழுவதும் திரையரங்குகளிலேயே அமர்ந்திருந்தால் ஒரு சமூகம் எப்படி முன்னேறும்?

ஆனால், இன்றைய ஆட்சியாளர்களோ காலையில் எழுந்தவுடன் திரைப்படம் பார்க்கச் சொல்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்கு தவெக அரசின் வழிகாட்டுதலா? இளைஞர்களின் திறமைகளை வளர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் இவ்வளவு வேகமாக முடிவெடுக்காத தவெக அரசு, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மட்டும் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன்?

இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசு, போதையை அதிகரிப்பதிலும், பொழுதுபோக்கை விரிவுபடுத்துவதிலேயே தனது கவனத்தைச் செலுத்துவது என்ன மாதிரியான புரட்சிகரமான ஆட்சி நிர்வாகம்? திரைப்படத்திற்கும், போதைக்கும் பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா முதலமைச்சர் அவர்களே? ஒரு நாட்டின் வளர்ச்சியைத் திரைப்படங்களின் வசூலைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது. அந்த நாட்டின் மக்கள் பெற்றுள்ள கல்வி, அறிவு, உடல்நலம், வேலைவாய்ப்பு, பொருளாதாரத் தன்னிறைவு ஆகியவற்றைக் கொண்டுதான் அளவிட முடியும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், "புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில், அதிகாலை 6 மணி முதல் ஒரு வாரத்திற்கு 6 காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் என்று மிகுந்த அக்கறையுடன், தமிழ்த் திரையுலகிற்கு ஆதரவளித்து அனுமதி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் இந்தச் செயல்பாடு குறித்து தாங்கள் 2026 நவம்பர் 4-ஆம் தேதியிட்ட கடிதத்தைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைந்து இக்கடிதத்தை அனுப்புகிறோம்.

மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய, பிரபல நடிகர்கள் நடித்த தமிழ்த் திரைப்படங்கள், வெளிமாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா / தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில், அதிகாலை 6 மணிக்கே வெளியாகிவிடுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அத்திரைப்படங்கள் காலை 9 மணிக்குத்தான் திரையிடத் தொடங்குகின்றன. அதற்குள் தவறான விமர்சனங்களும், படத்தைக் குறித்த எதிர்மறையான கருத்துகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, இங்கு திரைப்படம் பார்க்கக் காத்திருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தைக் குறைக்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு பிரச்சினைகளைத் தமிழ்த் திரையுலகம் சந்தித்து வருகிறது.

இதற்குத் தீர்வாக உலகெங்கும் தமிழ்த் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை முதலமைச்சர் தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர். திரு. A. ராஜ்மோகன் மூலமாக எடுத்துச் சென்றோம். எங்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உடனடியாக அனுமதி வழங்கிய முதலமைச்சர்  ஒட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகமே பாராட்டி வருகிறது.

ஆனால், இந்த அனுமதி வழங்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, இத்தகைய அனுமதி ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும் ஒரு செயலாகும் என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசைக் குறை கூறி தாங்கள் கடிதம் வெளியிட்டிருப்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. அதிலும், தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராகவும், தற்போது பல திரைப்படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகராகவும் திகழும் தாங்கள், எதற்காக இந்த அனுமதியை நாங்கள் கோரிப் பெற்றோம் என்பதை அறியாமல் இத்தகைய அறிக்கையை வெளியிட்டிருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.

எங்களது நியாயமான கோரிக்கையைத்தான் முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு இந்த அனுமதியை வழங்கியுள்ளார் என்பதை மீண்டும் ஒருமுறை தங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். தமிழ்த் திரையுலகின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழும் தாங்களும், தமிழ்த் திரையுலகின் நலன் கருதி வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியை வரவேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன்" என்று தெரிவித்துள்ளது.