சினிமா

விறுவிறுப்பாக நடைபெறும் 'அரசன்' பட ஷூட்டிங்.. ரிலீஸ் குறித்து வெளியான அப்டேட்!

By Christon
21 May 2026, 05:11 PM
சிம்புவின் 'அரசன்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, சில தடங்கல்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் வடசென்னை பின்னணியிலான ஒரு கேங்க்ஸ்டர் கதையாகும். இப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பதாக தகவல் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது படப்பிடிப்புப் பணிகள் மீண்டும் முழுவீச்சில் முடுக்கப்பட்டுள்ளன.

படப்பிடிப்பு நிலவரம்

தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்களின்படி, ‘அரசன்’ படத்தின் கோவில்பட்டி பகுதி படப்பிடிப்பு 14 நாட்களும், சென்னை பகுதி படப்பிடிப்பு 40 நாட்களும் என முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, தற்போது முக்கியப் பகுதிளுக்கான இரவு நேரக் காட்சிகள் தீவிரமாகப் படமாக்கப்பட்டு வருகின்றன.

தீபாவளிக்கு வெளியீடு

இப்பொழுது நடைபெற்று வரும் இரவு நேரப் படப்பிடிப்பில் நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சிலம்பரசன், ஆண்ட்ரியா மற்றும் அமீர் ஆகியோர் நடிக்கும் மிக முக்கியமான காட்சிகள் அடுத்தடுத்து படமாக்கப்பட உள்ளன. வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் திரைப்படத்தைத் திரைக்குக் கொண்டுவர இயக்குநர் வெற்றிமாறனும், சிலம்பரசனும் திட்டமிட்டுள்ளதால், படக்குழுவினர் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.