சினிமா

பசங்க பட நாயகனுக்கு திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்

By MUTHUKRISHNAN
30 Jun 2025, 08:38 PM
கற்றது தமிழ் மற்றும் பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்த நடிகர் ஸ்ரீராமுக்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்று முடிந்துள்ளது. இதுத்தொடர்பான திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குநர் ராமின் இயக்கத்தில், ஜீவாவின் நடிப்பில் வெளியான கற்றது தமிழ் திரைப்படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீராம். படத்தில் ஒரு பாடல் உட்பட மொத்தமே 20-25 நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றியிருந்தாலும், அவரின் நடிப்பு பலரால் பாரட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் குழந்தைகளை மையப்படுத்தி உருவாகிய ’பசங்க’ படம் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது மட்டுமின்றி தேசிய விருதுகளையும் வாரிக்குவித்தது. இப்படத்தில் ஜீவானந்தம் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் நடிகர் ஸ்ரீராம். இப்படத்தில் இவரது நடிப்பினை பாராட்டும் விதமாக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய திரைப்பட விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இதன்பின் பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும் படி படங்கள் இவருக்கு அமையவில்லை என்றாலும், ஜில்லா, கோலி சோடா, பாபநாசம் போன்ற படங்களில் இவரது நடிப்பு பலரது கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இவருக்கு சில தினங்களுக்கு முன்னர் எளிமையான முறையில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைப்பெற்றுள்ளது.

இதுத்தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 90’ஸ் கிட்ஸ் என்னது இவருக்கு கல்யாணமா? இப்போதானடா பசங்க படத்தில் பார்த்த மாதிரி இருக்கு.. என ஆச்சரியத்தினை வெளிப்படுத்தும் சில பதிவுகளையும் சமூக வலைத்தளத்தில் காண முடிகிறது. திருமணம் முடிந்துள்ள நடிகர் ஸ்ரீராமுக்கு வயது 29 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.