சினிமா

வெளிநாட்டு விற்பனை.. ரெக்கார்ட் படைத்த ரஜினியின் கூலி..!

By Jayakumar
18 Jun 2025, 06:14 PM
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்தின் வெளிநாட்டு வெளியீட்டுக்கான உரிமம் ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் நடித்த 'வேட்டையன்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து அவரது 'கூலி' படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தில், நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன், ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் பாலிவுட் நட்சத்திரம் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அதேபோல், நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார்.

சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள், பல்வேறு மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவு பெற்றுள்ளது. மேலும், படத்தின் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

முன்னதாக படத்தின் கிளிம்ஸ் மற்றும் 'சிக்கிடு வைப்..' பாடலின் புரோமோ வீடியோக்களை படக்குழு வெளியிட்டது. இவை இணையத்தில் வைரலாக நிலையில், ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். மேலும், இந்த படத்தின் முதல் பாடல் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 'கூலி' படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரூ.81 கோடிக்கு இந்த உரிமம் விற்கப்பட்டதாக தெரிகிறது. இது வெளிநாடுகளில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட தமிழ் திரைப்படம் எனவும் சொல்லப்படுகிறது.

'கூலி' படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டகாக வெளியான தகவலை அடுத்து, படம் திரையரங்குகளில் வெளியாகி அதிக வசூலை பெரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.