சினிமா

'இதயம் முரளி' படத்திற்குத் தடை இல்லை.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By Christon
10 Jul 2026, 12:24 PM
இதயம் முரளி படத்திற்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் பிரச்சினையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது.
இதயம் முரளி படத்திற்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் பிரச்சினையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் சுதா கொங்குரா மற்றும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இடையே நிலவி வரும் சம்பளப் பாக்கி விவகாரத்தில், 'இதயம் முரளி' திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'பராசக்தி' திரைப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தை இயக்குவதற்காகச் சுதா கொங்குராவிற்கு ரூ.15 கோடி ஊதியம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதில் ரூ.8.39 கோடி இன்னும் ஊதிய பாக்கியாக வைக்கப்பட்டுள்ளதால், அந்தத் தொகையைத் தனக்குச் செலுத்தக் கோரி சுதா கொங்குரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தனது மனுவில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அடுத்த படமான 'இதயம் முரளி' திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும், 'பராசக்தி' படத்தின் உரிமைகளை மூன்றாம் நபருக்கு வழங்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். மேலும், 'பராசக்தி' படத்தின் ஓடிடி (OTT) மற்றும் தொலைக்காட்சி உரிமம் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு இன்று இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதன்படி, 'இதயம் முரளி' திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க நீதிபதி முற்றிலும் மறுத்துவிட்டார். மேலும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குநருக்கும் இடையே உள்ள இந்தச் சம்பளப் பிரச்சினை விவகாரத்தை, நீதிமன்றத்திற்கு வெளியேயான மத்தியஸ்தர் ஒருவரை நியமித்து, அதன் மூலம் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.