Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுப்படுத்துவதா..? ஒற்றைப் பனைமரம் படத்தை திரையிட சீமான் எதிர்ப்பு!

By Kalandhai
24 Oct 2024, 04:12 PM
ஈழத்தாயக விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ஒற்றைப் பனைமரம் படத்தை தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை: புதியவன் ராசைய்யா இயக்கியுள்ள ஒற்றைப் பனைமரம் திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்தது. ஈழத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ் ஈழ களத்தில் முன்னாள் போராளிகளும், சமகாலத்தில் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்ல துணியாத பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஆனால், ஒற்றைப் பனைமரம் படத்தில், ஈழ விடுதலைப் போரில் பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் தொழிலாளர்கள் போல சித்தரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒற்றைப் பனைமரம் படம் பத்திரிக்கையாளர்களுக்காக திரையிடப்பட்ட போது, இதுபற்றி காரசாரமான விவாதம் எழுந்தது. இந்நிலையில், ஒற்றைப் பனைமரம் படத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், அதன் ரிலீஸுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், ஈழத்தாயக விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக 'ஒற்றை பனைமரம்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப் பரப்பரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஈழத்தில் நடைபெற்றது வெறும் வன்முறை வெறியாட்டம் அல்ல; உலகத்தமிழர் உணர்வோடும், உயிரோடும் இரண்டற கலந்துவிட்ட விடுதலைப்போராட்டம். ஈழத்தில் வாழ்ந்த தொப்புள்கொடி உறவுகள் வன்முறையின் மீது தீராக்காதல் கொண்டு மனநோயாளிகள் போல ஒரேநாளில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இனவெறி சிங்களவர்களின் இனவழிப்பு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, தமிழர் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு, இனி தங்கள் தாய் மண்ணில் வாழவே முடியாது என்ற கொடுஞ்சூழல் ஏற்பட்ட பிறகு முதலில் தொடங்கப்பட்டது தந்தை செல்வா தலைமையில் அகிம்சை போராட்டம் தான். 30 ஆண்டுகாலம் இனவாத இலங்கை அரசின் கொடும் அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்டு தோல்வியடைந்த பிறகு, வேறு வழியின்றி தான் தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் என்பது, இனவெறி இலங்கை அரசால் தமிழர்களின் மேல் திணிப்பட்ட ஒன்றாகும்.

எதிரி எந்த மொழியில் பேசுகிறானோ அதே மொழியில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர் என்பதே வரலாற்றுப் பேருண்மை. போராடினாலும் சாவோம்; போராடாவிட்டாலும் சாவோம்! ஆனால் போராடினால் ஒருவேளை வாழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தாலேயே அடிமை வாழ்வினை விட உரிமைச் சாவு மேலானது என்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்றே எம்மினச் சொந்தங்கள் ஈழத்தில் போராடி இன்னுயிரை ஈந்தனர். கடந்த 2009ம் ஆண்டு இருபது நாடுகள் கூடி தமிழீழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இன்றளவும் தமிழினம் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், மண் விடுதலைக்குப் போராடி வீரக் காவியங்களான மாவீரர்த் தெய்வங்களை இழிவுபடுத்தவோ அல்லது அவதூறு பரப்புவோ முயலும் எந்தவொரு படைப்பையும், தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரிக்கிறேன்.

ஆகவே, ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ஒற்றை பனைமரம் படத்தை தமிழ் மண்ணில் திரையிடக் கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு நாங்கள் அன்புடன் கோரிக்கை வைக்கிறோம். இத்திரைப்படத்தைத் திரையிடக்கூடாது என திரையரங்கங்களை முற்றுகையிட்டு போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளமாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். மேலும், தமிழ்நாடு அரசு இதனை உடனடியாகக் கவனத்தில் எடுத்து, தேவையற்ற சட்டம்-ஒழுங்கு சீர்கெடாமல் இருப்பதற்கு இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவிடாமல் தடுக்குமாறு இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.