பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி இருவரும் செப்டம்பர் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் தங்களது பிரச்சனையால் ஏற்கனவே சில காலம் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
மேலும் இருவரும் பிரிவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி கடந்த மாதம் 24 தேதி நேரில் ஆஜராகி மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை கோப்புக்கு எடுத்த சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, பரஸ்பரம் இருவரும் விவாகரத்து கோரிய மனுவை செப்டம்பர் 25 தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் விசாரணைக்கு இருவரும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
இருவரும் அன்று நேரில் வரும் பட்சத்தில் விவாகரத்து வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.