சினிமா

கடைசி நேரத்தில் தேவாவுக்கு என்ன நடந்தது? 45 ஆண்டுகால உதவியாளர் பார்த்திபன் பகிர்ந்த உருக்கமான தகவல்..!

By Sumalekha
17 Oct 2026, 06:45 PM
தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவு தமிழ் இசை ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், தேவாவின் கடைசி நேரத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து குமுதத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் .

திடீரென மயங்கி விழுந்த தேவா… பார்த்திபன் சொன்னது என்ன?

தேவாவின் வீட்டில் சுமார் 45 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பார்த்திபன், தேவாவின் அன்றாட வாழ்க்கை குறித்து பல நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். தேவாவுக்கு சைவ உணவுகள் மிகவும் பிடிக்கும் என்றும், வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என விரும்புவார் என்றும் தெரிவித்தார்.

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட தேவா, மேல்மருவத்தூர் கோயிலுக்கு அடிக்கடி சென்று வருவார் என்றும் கூறினார். குடும்பத்தினர் அனைவரையும் அன்புடன் கவனித்துக்கொள்வார் என்றும், மகனுடன் நண்பரைப் போலப் பழகுவார் என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

தினமும் வீட்டில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகே இசைப் பணிகளுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம் தேவா. சொந்த ஊரிலும் கரும்பு உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்ததாகப் பார்த்திபன் தெரிவித்தார்.

தேவாவின் கடைசி நேரம் குறித்துப் பேசிய அவர், காலையில் டிபன் வாங்கிவந்தபோது வீட்டில் இருந்த தேவா திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறினார். உடனே அவரைத் தனது மடியில் தாங்கிக்கொண்டு காரில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும், தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் காரை ஓட்டியதாகவும் தெரிவித்தார்.

மருத்துவமனையில் சுமார் அரை மணி நேரம் மருத்துவர்கள் முயற்சி செய்தும் தேவாவைக் காப்பாற்ற முடியவில்லை என்று பார்த்திபன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

37 ஆண்டுகளாகப் பயணித்த ஓட்டுநர் வணக்காமுடி!

தேவாவுடன் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய ஓட்டுநர் வணக்காமுடியும் தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். ‘பாட்ஷா’ திரைப்படம் உருவான காலத்திலிருந்து சுமார் 37 ஆண்டுகளாக அவ்வப்போது தேவாவுக்கு ஓட்டுநராகப் பணியாற்றியதாக அவர் கூறியுள்ளார்.

தேவா எப்போதும் ‘ஓம் சக்தி’ என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும், மூன்று நாட்களுக்கு முன்புகூட தன்னிடம் நலமாக இருக்கிறாயா என்று விசாரித்ததாகவும் வணக்காமுடி தெரிவித்துள்ளார்.

“அவருடன் பணியாற்றியதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அவர் மிகவும் இனிமையான மனிதர். அவரது குடும்பமே ஒரு பல்கலைக்கழகம் போன்றது. குடும்பத்தினர் அனைவரும் அவர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’… விஜய்யைப் பாட வைத்த இசை மேதை!

தேவாவின் இசைப் பயணத்தை நினைவுகூர்ந்த வணக்காமுடி, ‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட படங்கள் மூலம் அவர் ரசிகர்களுக்குக் கொடுத்த இசை அனுபவங்களைச் சுட்டிக்காட்டினார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும், அனைவரிடமும் அன்பாகப் பழகும் பண்பு அவரிடம் இருந்ததாகவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் பாடிய பாடல்களுடன் தேவாவின் இசைப் பங்களிப்பையும் நினைவுகூர்ந்த அவர், தேவா மிகுந்த மரியாதைக்குரியவர் என்று கூறியுள்ளார்.

ரசிகர்களுக்குப் பல இனிய பாடல்களைக் கொடுத்த தேவா, தனது குடும்பத்தினர் மற்றும் உடன் பணியாற்றியவர்களின் நினைவுகளில் அன்பான மனிதராகவும் எளிமையானவராகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது இசை என்றும் ரசிகர்களின் நினைவுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.