Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

"ரசிகர்களின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர் அஜித்"- விஜய்யை மறைமுகமாக விமர்சித்த பார்த்திபன்!

By Christon
14 Oct 2025, 12:36 PM
"பெரும்பலம் கொண்ட தன் ரசிகர் கூட்டத்தை அரசியல் மேடை அமைக்கப் பயன்படுத்த விரும்பாதவர் அஜித்" என்று நடிகர் பார்த்திபன் மறைமுகமாக விஜய்யை விமர்சித்துள்ளார்.
கார் ரேசிங்கில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நடிகர் அஜித்குமார், சமீபத்தில் ஸ்பெயினில் தன்னை சந்தித்த ரசிகர்கள் விசிலடித்துக் கூச்சலிட்டதால், அவர்களை சைகை மூலம் கண்டித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ரசிகர்களின் தவறைத் தொடர்ச்சியாக அஜித் கண்டித்துவரும் இந்தப் பண்பை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் குறித்துப் பார்த்திபன் ஒரு நேர்காணலில் பேசிய பழைய வீடியோவை எக்ஸ் தளத்தில் ஒரு பயனர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், "அஜித் ரொம்பத் தனித்துவமானவர். அவரோட decision making எல்லாம் அவ்வளவு தெளிவா இருக்கும்" என்று பார்த்திபன் பேசியிருந்தார்.

விஜய் மீது மறைமுக விமர்சனம்

இந்த வீடியோவைப் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பார்த்திபன், "Decision ma'KING' Ajith தான்! சலனமே இல்லாத மனிதர். கவனமே சினிமா மீதும் தன் தனிப்பட்ட வாழ்க்கை மீதும். பெரும்பலம் கொண்ட தன் சினிமா புகழையும் ரசிகக் கூட்டத்தையும் அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர். தன்னை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர். எனவே promotionக்கு கூட வராமல், தனக்கான உலகத்தில் பயணிக்கும் ஞானி மனநிலை மனிதர். ஆச்சர்யமான அபூர்வப் பிறவி. எல்லோருக்கும் நல்ல நண்பர்> எனக்கும்!"

நடிகர் விஜய் அரசியலுக்காகத் தனது ரசிகர்களைப் பயன்படுத்தி, அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சூழ்நிலையில், பார்த்திபனின் இந்தப் பதிவில், "பெரும்பலம் கொண்ட தன் ரசிகர் கூட்டத்தை அரசியல் மேடை அமைக்கப் பயன்படுத்த விரும்பாதவர்," மற்றும் "தன்னை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர்" போன்ற வரிகள் மறைமுகமாக நடிகர் விஜய்யை விமர்சிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.