உலகம்

24,000 ஆண்டுகள் பனியில் உறைந்த 'ஸாம்பி' புழு: உயிர்த்தெழுந்த அதிசயம்!

By Christon
27 Apr 2026, 10:54 AM
சைபீரியப் பகுதியில் உறைந்த நிலையில் இருந்த 24,000 ஆண்டுகள் பழமையான புழு ஒன்று மீண்டும் உயிர்த்தெழுந்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்கியுள்ள நிகழ்வு, உலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரஷியாவின் சைபீரியப் பகுதியில் உறைந்த நிலையில் இருந்த 24,000 ஆண்டுகள் பழமையான புழு ஒன்று மீண்டும் உயிர்த்தெழுந்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்கியுள்ள நிகழ்வு, உலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வடகிழக்கு சைபீரியாவின் அலாசியா ஆற்றங்கரையில் உள்ள ‘யெடோமா’ எனப்படும் நிரந்தர பனிப்படலத்திற்குள் ரஷிய விஞ்ஞானிகள் ஒரு நுண்ணிய புழுவின் படிமத்தைக் கண்டெடுத்தனர். மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக உறைந்திருந்த அந்தப் புழுவை ஆய்வகத்திற்குக் கொண்டு வந்து பனியை உருக்கியபோது, அது மீண்டும் உயிர் பெற்று நகரவும், உணவு உட்கொள்ளவும் தொடங்கியது.

அதிசய இனப்பெருக்கம்

உயிர்த்தெழுந்த அந்தப் புழு, துணை இல்லாமலேயே தானாகவே இனப்பெருக்கம் (Asexual Reproduction) செய்யத் தொடங்கியது விஞ்ஞானிகளுக்கு மற்றுமொரு ஆச்சரியத்தைத் தந்தது. அந்தப் புழுவிலிருந்து உருவான குட்டிப் புழுக்களும் எந்தவித உடல் குறைபாடுகளும் இன்றி ஆரோக்கியமாக இருந்தன. ரேடியோ கார்பன் சோதனையில், இந்தப் புழு சுமார் 24,000 ஆண்டுகள் வரை பனியில் உறைந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிரிப்டோபயாசிஸ் நிலை

பொதுவாக சில உயிரினங்கள் அதீத குளிரைத் தாங்க ‘கிரிப்டோபயாசிஸ்’ (Cryptobiosis) என்ற நிலைக்குச் செல்லும். அந்தச் சமயத்தில் அவற்றின் உடல் செயல்பாடுகள் தற்காலிகமாக முழுமையாக நின்றுவிடும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழித்தும் ஒரு உயிரினம் மீண்டும் உயிர்பெற்று இனப்பெருக்கம் செய்ய முடியும் என்பதற்கு இதுவே முதல் அறிவியல் ஆதாரமாகக் கருதப்படுகிறது. இதனைச் சிலர் 'ஸாம்பி' புழு என்று அழைத்தாலும், அறிவியல் ரீதியாக அதன் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததே தவிர, அது உயிரிழக்கவில்லை என விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.