உலகம்

கேட்டரிங் லாரியில் ரகசியமாக டிரம்ப்! ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ மாறிய டிகாய்

By Christon
12 Aug 2026, 08:24 AM
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வேறு விமானத்துக்கு மாற்றிய சம்பவம் தொடர்பான புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வேறு விமானத்துக்கு மாற்றிய சம்பவம் தொடர்பான புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அங்காரா விமான நிலையத்தில் டிரம்ப் ஏறியிருந்த அதிபருக்கான விமானமான ஏர் ஃபோர்ஸ் ஒன் அருகே கேட்டரிங் லாரி ஒன்று செல்வதும், பின்னர் அந்த லாரி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஆனால், அந்த லாரி வழியாகவே டிரம்ப் ரகசியமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, அருகில் இருந்த சிறிய அமெரிக்க அரசு விமானமான C-32A-க்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் டிரம்ப் தொடர்ந்து அதிபரின் விமானத்தில்தான் பயணம் செய்கிறார் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் வேறு விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

துருக்கியில் இருந்து பிரிட்டன் செல்லும்போது, டிரம்ப் C-32A விமானத்தில் பயணம் செய்ததாகவும், பிரிட்டனை சென்றடைந்த பிறகு மீண்டும் கத்தார் வழங்கிய விமானத்துக்கு ரகசியமாக மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் துருக்கிக்கு கத்தார் வழங்கிய சொகுசு விமானத்தில் சென்றிருந்தார். எதிர்காலத்தில் அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானமாக இந்த விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. எனினும், அந்த விமானம் இன்னும் முழுமையாக மாற்றியமைக்கும் பணியில் இருந்ததால், பழைய அதிபர் விமானங்களில் உள்ள சில ஏவுகணை கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு எதிர்வினை அமைப்புகள் அதில் முழுமையாக இல்லை எனக் கூறப்பட்டது.

இதனால் துருக்கியில் இருந்து டிரம்ப்பை அனுப்புவதற்கு பழைய அதிபர் விமானத்தை பயன்படுத்தப் போவதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அந்த அறிவிப்பும் ரகசிய பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம்.

டிரம்ப் பழைய அதிபர் விமானத்தில் ஏறிய பிறகு கேட்டரிங் லாரி ஒன்று அந்த விமானத்தை அணுகியது. பின்னர் அந்த லாரி சிறிய C-32A விமானம் இருக்கும் பகுதிக்கு சென்றதாக வீடியோவில் தெரிகிறது.

இதன் மூலம் டிரம்ப் ரகசியமாக C-32A விமானத்திற்கு மாற்றப்பட்டார். அதே நேரத்தில், டிரம்ப் பயணம் செய்வதாக காட்டப்பட்ட அதிபர் விமானம் தொடர்ந்து அங்கேயே இருந்து பின்னர் புறப்பட்டது.

கத்தார் விமானம், பழைய அதிபர் விமானம் மற்றும் C-32A ஆகிய மூன்று விமானங்களும் தனித்தனியாக பிரிட்டனை நோக்கிப் புறப்பட்டன. டிரம்ப் C-32A-வில் பயணம் செய்த நிலையில், பிரிட்டனில் மீண்டும் கத்தார் வழங்கிய விமானத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் டிரம்ப்புடன் பயணித்த பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஆதரவு பணியாளர்கள் டிரம்ப் இல்லாத விமானத்தில் பயணித்தது அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

இந்த ரகசிய நடவடிக்கைக்கு ஈரானிடமிருந்து வந்த அச்சுறுத்தல் காரணமாக இருக்கலாம் என அமெரிக்க ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், வெள்ளை மாளிகை இந்த விவரங்களை நேரடியாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் சியூங், அதிபரின் விமானத்தில் உயர்மட்ட பாதுகாப்பு நடைமுறைகள் இருப்பதாகவும், டிரம்ப்புக்கு எதிரான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கிடைக்கும் அனைத்து வழிகளையும் அதிகாரிகள் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான பகுதிகளுக்குச் செல்லும்போது அமெரிக்க அதிபர்கள் ரகசிய பாதைகள் மற்றும் மாற்று விமானங்களைப் பயன்படுத்திய சம்பவங்கள் ஏற்கனவே உள்ளன.

இதற்கு முன்னதாக, டிரம்ப் 2019-ல் ஆப்கானிஸ்தானுக்கு ரகசியமாகச் சென்றார். முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் பராக் ஒபாமாவும் முறையே 2003 மற்றும் 2010-ல் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கு ரகசியப் பயணங்களை மேற்கொண்டனர்.

ஜோ பைடனும் 2023-ல் உக்ரைனுக்கு ரகசியமாகப் பயணம் செய்தார். ஆனால் துருக்கி சம்பவம் வித்தியாசமானதாக பார்க்கப்படுகிறது. காரணம், டிரம்ப்புடன் பயணித்த பத்திரிகையாளர்களுக்கே அவர் விமானத்தை விட்டு வெளியேறிய தகவல் தெரியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

பல வாரங்களுக்குப் பிறகே இந்த ரகசிய நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் டிரம்ப்பின் பாதுகாப்பு அச்சுறுத்தல் எந்த அளவுக்கு தீவிரமாக இருந்தது, அதனை மறைக்க அதிகாரிகள் எவ்வளவு விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.