உலகம்

17 வயது டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை: அதிர்ச்சியில் ரசிகர்கள்

By MUTHUKRISHNAN
03 Jun 2025, 06:16 PM
17 வயதே ஆன பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சமூக ஊடகங்களுள் ஒன்றான டிக்டாக் சில பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இன்னமும் டிக்டாக் செயல்பாட்டில் உள்ளது.

சனா யூசப் என்கிற 17 வயதான பெண், ஒரு டிக்டாக் பிரபலம் ஆவார். இவரது அக்கௌண்டினை சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பலோ செய்கிறார்கள். இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டில் சனா யூசப் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.முதற்கட்ட விசாரணையில் உறவினர் ஒருவரே சனா யூசப்பை சுட்டுக்கொன்றுள்ளதாக தெரியவந்துள்ளது பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சனா யூசுப்- ஆணவக்கொலையா?

டிக்டாக் பிரபலம் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கொலை சம்பவம் ஆணவக்கொலையா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இஸ்லாம் மதத்தை சார்ந்த சனா யூசுப், டிக்டாக் போன்ற செயலியினை பயன்படுத்தி வந்த காரணத்திற்காக, அவரது உறவினர் கொலை செய்ய நினைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அப்பர் சித்ரால் மாவட்டத்தைச் சேர்ந்த சனா யூசுப், இஸ்லாமாபாத்தின் G-13 செக்டாரில் வசித்து வந்தார். சனா யூசுப், இன்றைய தினம் தனது உறவினர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த உறவினர் சனா யூசுப்பினை மார்பில் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தற்போது, சனா யூசுப்பின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ரசிகர்கள் இரங்கல்:

டிக்டாக் பிரபலம் சனா யூசுப் மறைவினைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் பல பயனர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர் தனது பதிவில், "கனவுகளும், நம்பிக்கையும், தைரியமும் நிறைந்த ஒரு இளம் பெண் - ஆன்லைனில் இருப்பதற்குத் துணிந்ததற்காகவே கொல்லப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் அவர் இருந்தார் என்ற காரணத்திற்கக அவரது உயிர் கொடூரமாகப் பறிக்கப்பட்டுள்ளது," என குறிப்பிட்டுள்ளார்.

சனா யூசப் கொலை செய்யப்பட்டதை போன்றே, இந்த ஆண்டு தொடக்கத்தில் குவெட்டாவில் ஹிரா என்ற 15 வயது சிறுமி, டிக்டாக் பயன்படுத்தியதற்காக தனது தந்தை மற்றும் மாமாவால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் வசித்து வந்த அந்த சிறுமி ஜனவரி மாதம் தனது குடும்பத்துடன் பாகிஸ்தான் திரும்பியிருந்தார். அவர் டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிடுவதை நிறுத்த மறுத்ததால், அவரது குடும்ப உறுப்பினர்கள் கோபமடைந்து சிறுமியை கொலை செய்ததாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.