Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

31-வது முறையாக எவரெஸ்ட் சிகரம்.. புதிய சாதனை படைத்தார் காமி ரீட்டா

By MUTHUKRISHNAN
27 May 2025, 12:29 PM
நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மலையேறும் வழிகாட்டியான காமி ரீட்டா ஷெர்பா, எவரெஸ்ட் சிகரத்தை 31-வது முறையாக வெற்றிகரமாக ஏறி, தனது சொந்த சாதனையை தானே முறியடித்துள்ளார். இந்த சாதனை மூலம் உலக மலையேற்ற வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளார்.
மலைகளின் மீதும், ட்ரெக்கிங் மீதும் பெரும் காதல் கொண்டவர்களுக்கு, தன் வாழ்நாளில் ஒரு முறையாவது உலகின் மிக உயரமான சிகரமாக தனித்து விளங்கும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துவிட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் வார்த்தைகளில் சொல்வது போல் எவரெஸ்ட் சிகரத்தை அவ்வளவு எளிதில் அடைந்துவிட முடியாது. 8,848.86 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தினை அடைவதற்கு மனவலிமை அதிகம் இருக்க வேண்டும். உயிருக்கும் உத்தரவாதம் இல்லை.

இப்படி எவரெஸ்ட் சிகரத்தை நாம் கூறிக்கொண்டிருக்கும் வேளையில் சர்வ சாதரணமாக 31-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார் காமி ரீட்டா ஷெர்பா. மலையேற்றத்தில் தொடர்ந்து வெற்றிகரமாக சாதித்து வரும் காமி ரீட்டா ஷெர்பாவிற்கு, "எவரெஸ்ட் மனிதன்" அல்லது "சூப்பர் ஷெர்பா" என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்து காணலாம்.

ஷெர்பா சமூகத்தை சார்ந்தவர்:

1970 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி நேபாளத்தின் எவரெஸ்ட் பகுதியில் உள்ள சோலுகும்புவின் தாமி என்ற கிராமத்தில் காமி ரீட்டா பிறந்தார். இமயமலையில் பயணக் குழுக்களுக்கு வழிகாட்டிகளாகவும், அவர்களது உடைமைகளை கொண்டு செல்லும் சுமைதாங்கிகளாகவும் பாரம்பரியமாகப் பணியாற்றும் ஷெர்பா சமூகத்தைச் சேர்ந்தவர்.

காமி ரீட்டா ஷெர்பா முதன்முதலில் 1994 ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை ஏறினார். அதன் பிறகு கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்ட்டை ஏறி வருகிறார். எவரெஸ்ட் சிகரத்துடன் சேர்த்து, கே2, மவுண்ட் லோட்சே, மனாஸ்லு, மற்றும் சோ ஓயு போன்ற பல உயரமான சிகரங்களையும் காமி ரீட்டா ஏறியுள்ளார். இது மலையேறுவதில் அவருக்குள்ள அனுபவத்தையும், அசாத்திய திறமையையும் வெளிப்படுத்துகிறது.

55 வயதிலும் தளராத மனவலிமை:

செவன் சம்மிட் ட்ரெக்ஸ் (Seven Summit Treks) நிறுவனத்தின் தலைவர் மிங்மா ஷெர்பா கூறுகையில், ”55 வயதான காமி ரீட்டா ஷெர்பா செவ்வாய்க்கிழமையான இன்று (மே 27, 2025 ) அதிகாலை 4 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தார். இதன் மூலம் உலகின் மிக உயரமான சிகரத்தை அதிக முறை ஏறியவர் என்ற தனது சாதனையினை தானே முறியடித்துள்ளார்” என தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தின் அட்வென்ச்சர் விங் எவரெஸ்ட் எக்ஸ்பெடிஷன் குழுவிற்கு வழிகாட்டியாக அவர் இந்தப் பயணத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஷெர்பா சமூகத்தின் மையப்பகுதியான சோலுகும்பி பகுதியில் பிறந்த காமி ரீட்டாவின் தந்தை மலை வழிகாட்டிகளில் ஒருவராக இருந்தவர். செவன் சம்மிட் ட்ரெக்ஸின் பயண இயக்குநரான சாங் தாவா ஷெர்பா கூறுகையில், “காமி ரீட்டா இளம் வயது முதலே மலையேற்றத்தில் ஆர்வமுடையவராக திகழ்ந்தார். காமி ரீட்டா தனது மலையேற்றப் பயணத்தை 1992 ஆம் ஆண்டு ஒரு துணைப் பணியாளராகத் தொடங்கினார். 1994 மற்றும் 2025-க்கு இடையில் காமி ரீட்டா K2 மற்றும் மவுண்ட் லோட்சேவை தலா ஒரு முறையும், மனாஸ்லுவை மூன்று முறையும், சோ ஓயுவை எட்டு முறையும் எட்டியுள்ளார்.” என குறிப்பிட்டுள்ளார்.

காமி ரீட்டாவின் நெருங்கிய போட்டியளராக கருதப்படும் சக ஷெர்பா வழிகாட்டியான பசந்த் தாவா, எவரெஸ்ட் சிகரத்தினை 29 முறை வெற்றிகரமாக ஏறியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.