உலகம்

டிரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. பரபரப்பில் உலக நாடுகள்!

By Christon
31 Aug 2026, 01:03 PM
ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ஏஐ விடியோவால் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான அமெரிக்க ராணுவத்தின் சமீபத்திய தாக்குதல்களைச் சித்தரிக்கும் இரண்டு ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களைத் தனது 'டிரூத் சோஷியல்' தளத்தில் பகிர்ந்துள்ளார். ஈரானின் முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவு (Kharg Island) மீதான குண்டுவீச்சு சம்பவம் போன்று அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

டிரம்ப் பகிர்ந்த செயற்கை நுண்ணறிவு வீடியோவில், எண்ணெய் சேமிப்பு தொட்டி மற்றும் எண்ணெய் டேங்கர் கப்பலில் சக்திவாய்ந்த வெடிப்புகள் ஏற்படுவது போன்றும், ஒரு விமானம் மேலே பறப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஜூலை மாதத்திற்குப் பிறகு, ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லாராக் தீவில் இருந்த ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலேயே டிரம்ப் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

ஜலசந்தியில் ஈரான் மேலும் கடல் வெடிமருந்துகளை இடுவதைத் தடுப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. ஈரானை அச்சுறுத்துவதற்காகவே டிரம்ப் இதுபோன்ற மிகைப்படுத்தப்பட்ட ஏஐ வீடியோக்களைப் பகிர்ந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே, ஜோர்டானில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ விமான தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரக் காவல் படை தெரிவித்துள்ளது. ஜோர்டான் ராணுவம் 8 ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாகக் கூறியுள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் மின்ஹாத் விமான தளத்தில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் கடற்கரையிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கார்க் தீவு, அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான மையமாகும். போருக்கு முன்பாக ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி இந்தத் தீவின் வழியாகவே நடைபெற்றது. ஆழமான கடற்பகுதி என்பதால் மிகப்பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் இங்கு எளிதாக வந்து செல்ல முடியும்.

தற்போது அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை காரணமாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வெகுவாகக் குறைந்துள்ளது. இருப்பினும், இத்தீவின் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் ஈரானின் ஆற்றல் வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதித்து, அந்நாட்டுப் பொருளாதாரத்திற்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.