உலகம்

எண்ணெய் கப்பல்கள் தாக்குதலில் இந்திய ஊழியர் பலி.. ஈரான் தூதருக்கு மத்திய அரசு சம்மன்!

By Christon
14 Jul 2026, 03:20 PM
ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய ஊழியர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்ததோடு, 6 இந்தியர்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஈரானிய தூதரகத்தின் துணைத் தூதரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் அழைத்துத் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், இதுகுறித்த விளக்கத்தையும் கோரியுள்ளது.

சர்வதேச அளவில் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதியில் கடந்து சென்ற 'மொம்பாசா' மற்றும் 'அல் பகியா' ஆகிய இரு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் 'மொம்பாசா' கப்பலில் இருந்த இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 6 இந்தியர்கள் மற்றும் 2 உக்ரைனியர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சர்வதேச நீர்வழிப்பாதையில் மாலுமிகளைக் குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய வன்முறைத் தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் தீவிரமடைந்து வருவது கவலையளிக்கிறது; வன்முறையை உடனடியாகக் கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் அமைதியை நிலைநாட்ட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது. இந்த வளைகுடா மோதலில் இதுவரை 11 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலால் இரு கப்பல்களிலும் தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும். நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், இந்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கவும் தங்களுக்கு முழு உரிமை உள்ளது" என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹோர்முஸ் நீரிணையில் ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அறிவித்து, பாதுகாப்புக்கான கட்டணத்தை வசூலிக்கப் போவதாகக் குறிப்பிட்டதை அடுத்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாகவே ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.