உலகம்

'டிட்வா' புயல் தாக்குதல்: இலங்கையில் உயிரிழப்பு எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு!

By Christon
29 Nov 2025, 01:47 PM
இலங்கையில், 'டிட்வா' புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் 130-க்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் காணாமல் போயுள்ளதால், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பலி எண்ணிக்கை அதிகரிப்பு

'டிட்வா' புயலினால், இலங்கை முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சூறாவளிக் காற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 123 ஆக உயர்ந்துள்ளது என்று இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது.

அதிகப்படியான பாதிப்புகள் ஏற்பட்ட கண்டி மாவட்டத்தில் மட்டும் 51 பேர் பலியாகியுள்ளனர். மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் 1 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,23,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளும் மத்திய அரசின் உதவியும்

பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததுடன், 20 குழந்தைகள் உள்பட 130-க்கும் அதிகமான மக்கள் மாயமாகியுள்ளதால் அவர்களைத் தேடும் பணிகளில் இலங்கையின் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை நாட்டுக்கு உதவும் விதமாக, முன்னதாக மத்திய அரசு சுமார் 27 டன் அளவிலான நிவாரணப் பொருள்களை அனுப்பியது.

மேலும், அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 80 வீரர்களைக் கொண்ட தேசியப் பேரிடர் மீட்புப் படையும் (NDRF) அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.