உலகம்

வியட்நாமில் படகு விபத்து: தமிழர் ஒருவர் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் பலி!

By Christon
11 Jul 2026, 05:15 PM
வியட்நாமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
வியட்நாமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் (Phu Quoc) தீவு அருகே 32 இந்தியர்கள் உட்பட 36 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முருகபிரபு (44) என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்தப் படகில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் பயணித்ததாகக் கூறப்படும் நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்புகள் குறித்த முழுமையான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இக்கோர விபத்து குறித்து வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் உள்ளூர் மீட்புக் குழுவினர் தீவிரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான துல்லியமான தகவல்கள் மற்றும் அவசர உதவிகளை உடனுக்குடன் வழங்குவதற்காக ஹனோயில் உள்ள இந்திய தூதரகத்திலும், ஹோ சி மின் நகரில் உள்ள தூதரக ஜெனரல் அலுவலகத்திலும் அவசரக் கட்டுப்பாட்டு அறைகள் (Control Rooms) திறக்கப்பட்டுச் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்திய அதிகாரிகள் தொடர்ந்து உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.