உலகம்

அம்மா கொடுத்த பிறந்த நாள் பரிசு.. 16 வயது சிறுவனின் செயலால் உறைந்துபோன அமெரிக்கா!

By Christon
20 Oct 2026, 08:24 PM
அமெரிக்காவில் 16 வயது சிறுவன் பள்ளிக்குள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வயது சிறுவன் நடத்திய இந்தத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட கிரிஃப்பின் ஜே. ஜான் என்ற 16 வயது சிறுவனுக்கு, அவனது தாய் ஷாந்தை நிக்கர்சன் என்பவரே அந்தத் துப்பாக்கியைப் பிறந்தநாள் பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 2026-ல் சட்டப்பூர்வமாக வாங்கப்பட்ட 'மேவ்ரிக் 88' ரக ஷாட்கன் துப்பாக்கியை, பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துமாறு தாய் தனது மகனிடம் கொடுத்துள்ளார்.

பெண்ட் நகரில் உள்ள 'சில்வர் ரெயில்' தொடக்கப் பள்ளிக்குள் பூட்டப்பட்டிருந்த கண்ணாடிக்கா கதவைச் சுட்டு உடைத்துக்கொண்டு அச்சிறுவன் உள்ளே நுழைந்துள்ளான். தான் முன்பு படித்த அதே பள்ளியின் வகுப்பறைக்குள் புகுந்து அவன் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், 10 வயதுக்கு உட்பட்ட 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மேகன் லேம்பர்ட் என்ற 25 வயது ஆசிரியையும் இந்தச் சம்பவத்தில் பலியானார். 7 வயதுச் சிறுமி மற்றும் 54 வயது ஆசிரியை ஒருவர் காயமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், தாக்குதல் நடந்தபோது வகுப்பறைக்குள் நுழைந்த கேலப் ஜியாமன்கோ என்ற 36 வயது நபர், துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவனைச் சுட்டு வீழ்த்தினார். தனது மகள்களைப் பள்ளியில் விட்டுவிட்டு வெளியில் நின்று கொண்டிருந்த அவர், துப்பாக்கிச் சத்தம் கேட்டு உள்ளே சென்று, ஆசிரியருடன் போராடிக்கொண்டிருந்த சிறுவனைச் சுட்டுக் கொன்று மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுத்துள்ளார்.

சிறுவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பள்ளி நிர்வாகத்தின் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் 16 வயது சிறுவனுக்குத் துப்பாக்கி கிடைத்தது எப்படி என்பது குறித்து சட்டப்பூர்வமாக விசாரணை நடத்தப் பலியான குழந்தையின் பெற்றோர் வழக்கறிஞர்களை நியமித்துள்ளனர்.